18 வயதுக்குள் திருமணம்!- இந்தியாவின் அதிர்ச்சி புள்ளிவிபரம்

TAMIL CNN  TAMIL CNN
18 வயதுக்குள் திருமணம்! இந்தியாவின் அதிர்ச்சி புள்ளிவிபரம்

இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்குள் திருமணம் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி இந்திய ஆண்களில் சுமார் 6 சதவீதம் பேரும், பெண்களில் 31 சதவீதத்துக்கு மேற்பட்டோரும் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக உள்ள தகவல் வெளியாகி சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

குறிப்பிட்ட பருவத்திற்குள் திருமணம் செய்துகொள்வதால் பெண்களுக்கு உடல்நலக்கோளாறு , மற்றும் சமூகப் பிரச்னைகள் உள்ளிட்டவை உருவாகின்றன. இதை தடுக்கும் விதமாக குழந்தை திருமணத்துக்கு எதிராக அரசு தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இந்த பிரசாரங்கள் மத்தியில் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரம் சொல்கிறது. கணக்கெடுப்பில் 15 சதவீத பெண்கள் 16 வயதுக்கு முன்பே திருமணம் ஆனவர்களாக இருப்பது சமூக ஆர்வலர்களை கவலைகொள்ள வைத்துள்ளது. இதுபோல் 40 சதவீத ஆண்கள் சட்டப்பூர்வ திருமண வயதான 21 க்கு முன்னரே திருமணம் ஆனவர்களாக உள்ளனர்.

மேலும் இந்த கணக்கெடுப்பில் தொழில் அடிப்படையில் ஆராய்ந்தால், 18 வயதுக்குள் திருமணம் ஆன பெண்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கடைநிலை தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். ஆண்களி லும் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களில் இந்தப் பிரிவினரே அதிகமாக உள்ளனர்.

18 வயதுக்குள் திருமணம் ஆன பெண்கள் மற்றும் ஆண்கள் எண்ணிக்கையில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத் தில் திருமணம் ஆன பெண்களில் 45 சதவீதம் பேர் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களாக உள்ளனர். இதுபோல் 10 சதவீத ஆண்கள் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களாக இருக்கின்றனர்.

ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் 40 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக உள்ளனர். பீகார், ஹரியானா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக உள்ளனர்.

கல்வி மற்றும் அனைத்து விஷயங்களிலும் பெண்கள் இன்று சமத்துவத்தை எட்டிய நிலையில், அரசு போதிய விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தபோதிலும் இத்தகைய சமூக சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர். ‘சமூகரீதியில் நாம் எந்த அளவுக்கு பழமைவாத எண்ணம் கொண்டவர்களாக உள்ளோம் என்பதையே இது காட்டுவதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குழந்தைத் திருமணத்திற்கு எதிரான பிரசாரத்தை, மத்திய அரசு இன்னும் தீவிரப்படுத்தவேண்டிய அவசியத்தை இந்த புள்ளிவிவரம் உருவாக்கியுள்ளது.

மூலக்கதை