சுவாதி கொல்லப்பட்டு விட்டார்! மறுபடியும் கொலை செய்ய வேண்டாம் (Video)

TAMIL CNN  TAMIL CNN
சுவாதி கொல்லப்பட்டு விட்டார்! மறுபடியும் கொலை செய்ய வேண்டாம் (Video)

நான்கு நாட்களாக சென்னை மாநகரமே மிகப் பெரிய பதற்ற நிலையில் இருக்கிறது. காரணம், எல்லோருக்கும் தெரியும்.

காலை நேரம், பொதுமக்கள் கூடும் ரயில் நிலையத்தில் ஐ.டி பெண் ஊழியர் ஒருவர், இளைஞன் ஒருவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

வெட்டியவன் தப்பி ஓடிவிட்டான். போலீஸார் அவனைத் தேடி வருகின்றனர். பிடிக்கலாம் அல்லது எத்தனையோ பிடிபடாக் குற்றவாளிகள் வரிசையில் அவனும் போய்ச் சேரலாம்.

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் என்று சொல்லப்படும் சென்னையில் ஒரு ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது என்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உண்மையில் மிக அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுவதில் இந்திய அளவில் தமிழகம்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

2014-ம் ஆண்டு தேசியக் குற்றவியல் ஆவண நடுவத்தின் (National Crime Records Bureau) அறிக்கையின்படி, தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தோராயமாக 20 சதவிகிதம் நடைபெறுகிறது.

இதில் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாவது 19 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்கள்தான்.

சுவாதியின் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், சென்னையில் வெளியே செல்லும் அனைத்துப் பெண்களிடமுமே ஓர் அச்ச உணர்வைப் பார்க்க முடிகிறது.


சுவாதியின் படுகொலை, ஏதோ ஒரு பதற்ற நிலைக்கு எல்லோரையும் அழைத்துச் சென்று இருக்கிறது.

ஆனால், சுவாதியின் படுகொலையைவிட சுவாதி தொடர்பாகப் பரப்பி விடப்படும் செய்திகள் பெண்களுக்கு அதிக பயத்தைக் கொடுக்கிறது.

ஒரு கொலையை கிசுகிசுவாக மாற்றிப் புலனாய்வுச் செய்திகளைப் பரப்புவதை நம்மால் இரண்டு மூன்று நாட்களாகப் பார்க்க முடிகிறது.

சுவாதியின் முகப்புத்தகத்தை ஆராய்ந்தால் அதில் ஆண் நண்பர்கள் அதிகம் இருக்கிறார்களாம். இது ஒரு கண்டுபிடிப்பு.

எல்லாப் பெண்களின் முகப்புத்தகத்திலும் ஆண் நண்பர்கள் அதிகமாகத்தான் இருப்பார்கள். இது மிகவும் எளிதாகப் புரியும் லாஜிக்.

அதையும் தாண்டி இன்னொரு செய்தி இருந்தது. அவர் பகிர்ந்த படங்கள் மற்றும் அவரது நிலைத்தகவல்கள் (status) பற்றிய செய்தி.

அவர் ‘அலைபாயுதே’ மற்றும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து இருந்தாராம். காதல் பற்றிய நிறையச் செய்திகளும் இருந்தனவாம்.

சுவாதியின் கொலைக்கான காரணம் தெரிவதற்கு முன்னரே எவ்வளவு கற்பனைகள்… எவ்வளவு செய்திகள்? அப்பப்பா! ஒரு பெண்ணாக எங்களுக்கு இருக்கும் பயமெல்லாம் எங்களை யாரேனும் கொன்று விடுவார்களோ என்பதல்ல.

அதையும் தாண்டி கொன்றுவிட்டால் அதை எப்படிப்பட்ட செய்தியாக பரவும் என்பதுதான். எந்தச் செய்தி ஆகினும் அதில் ஒரு கிசுகிசுவைத் தேடும் பாலியல் வறட்சி கொண்ட சமூகமாக நாம் இருக்கிறோம் என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது.

இந்தக் கொலைச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேறு எதையோ சில சமூக விரோதிகள் ‘சாதிக்க’ நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.

மேலும், இந்தக் கொலையை ஆணவப் படுகொலைகளுடன் எப்படி ஒப்பிட முடியும் என்று தெரியவில்லை.

சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்ட 81 பேரையும் தமிழக மக்கள் மெளனமாகவே கடந்துசென்றார்கள். 81 பேர் பற்றிய விரிவான செய்திகள் எங்கும் வெளியிடப் படவில்லை.

அதை ஒரு குழு ஆய்வு செய்து வெளியிட்டபோதுதான் அது வெளியே வந்தது என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், அதையும் தமிழகம் வெகு எளிதாகவே கடந்துசென்றது.

கடந்த மூன்று வருடங்களில் நடந்த 81 ஆணவப் படுகொலைகளில் அதிக அளவில் கொல்லப்பட்டவர்கள் பெண்கள். எனவே, பிரச்னை இந்தச் சமூகத்தில்தான் உள்ளது.

இந்தச் சமூகம் பெண்களை ஒரு உடைமையாகக் கருதும் சமூகம். உலக மயமாக்கல் பெண்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்து இருக்கிறது என்று சிலர் கூவுகிறார்கள்.

ஆனால், உலக மயமாக்கல் உடைமை மனப்பான்மையை மிகத் தீவிரமடையச் செய்து இருக்கிறது. இந்தச் சமூகம் முழுக்க முழுக்க ஆண்களால் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க சமூகம்.

பொதுவுடைமைச் சமூகத்தில், தாய்வழிச் சமூகத்தில் இருந்து தந்தைவழிச் சமூகமாக, சொத்துடைமைச் சமூகமாக மாறியது முதல் இன்றுவரை பெண்களின் உடல் மீதான ஆண்களின் உடைமை மனப்பான்மை ஊறி இருக்கிறது.

அதைக் கல்வி, சிறிதளவும் மாற்றவில்லை. கல்வித் தரத்தின் லட்சணம் அப்படி. பாலியல் கல்வி பற்றி இன்றும் விவாதித்துக் கொண்டேதான் இருக்கிறோம்.

15 வயதில் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கல்வியைக் கொடுக்காமல், மதிப்பெண் எடுக்கும் மெஷினாக அவனை இந்தச் சமூகம் மாற்றிவைத்து இருக்கிறது.

இது தவிர படங்களில் இடம்பெறும் காட்சிகள், பெண்களின் மீதான ஆணாதிக்க சமூகத்தின் அடக்குமுறையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.

ஆண்கள், பெண்களின் மீதான வன்முறையை நிகழ்த்தும் காட்சிகள் அனைத்தும் படங்களில் ஒரு ஹீரோயிசமாக காட்டப் படுகின்றன.

தொடர்ந்து ஆண்களுக்கான பெண்களின் மீதான வன்மத்தை ஊக்குவிப்பதாகப் பாடல்கள் வருகின்றன. பெண்கள் ஏமாற்றுவார்கள் என்று பெண்களின் மீதான வக்கிரத்தை ஏற்றி வருகின்றன.

அது ஆண்களிடம் மேலும் மேலும் வன்மத்தைத் தக்கவைக்கச் செய்கிறது. படம் எடுப்பவர்கள் காசு பார்த்து விடுகிறார்கள். ஆனால், அவர்கள் இந்தச் சமூகத்தைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

இவை எல்லாவற்றின் வெளிப்பாடுதான் இன்று சுவாதி என்ற பெண்ணின் கொலைக்குள் காதல் கதையைத் தேடும், அவரது நடத்தை மீதான விமர்சனங்களை வைக்கும் ஆட்களைக் கொண்ட இந்தச் சமூகம்.

இது, மேலும் மேலும் பெண்களின் மீதான ஓர் இறுக்கத்தைக் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது.

இது இறுக்கிக்கொண்டேதான் போகும். இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் கொல்லப்பட்ட பெண் சுவாதி. கண்டிப்பாக சுவாதியின் கொலைக்குப் பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால், சுவாதியின் கொலையைப் பயன்படுத்திக்கொண்டு சமூக அமைதியைக் குலைக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

“இது சாதி, அரசியல், மதம் சம்பந்தப்பட்ட கொலை அல்ல… எங்களது குழந்தை குறித்து எங்களுக்கு நன்கு தெரியும். தயவுசெய்து சுவாதி குறித்துத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்” என்று சுவாதியின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணாக எங்களது கோரிக்கை எல்லாம் குற்றவாளி குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால் மட்டும் வெளிப்படுத்துங்கள். ஏற்கெனவே தங்கள் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் குடும்பத்துக்கு மேலும் வலியைச் சேர்க்காதீர்கள்.

இந்தச் சமூகத்தில் இன்னொரு சுவாதி உருவாகாமல் இருக்க, வதந்திகளைப் பரப்பாமல் உங்கள் குழந்தைகளுக்கு வாழ்வியலையும், வாழ்வின் அறத்தையும் சொல்லிக் கொடுங்கள்.

நன்றி: விகடன்-

மூலக்கதை