ஏட்டிக்குப் போட்டியாக ஓடி நடுரோட்டில் ரேஸ்!- வானில் அடிபட்டு 4 இளைஞர்கள் பரிதாப பலி (Photos)

TAMIL CNN  TAMIL CNN
ஏட்டிக்குப் போட்டியாக ஓடி நடுரோட்டில் ரேஸ்! வானில் அடிபட்டு 4 இளைஞர்கள் பரிதாப பலி (Photos)

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நெல்லை மாவட்டத்தில் அதி வேகமாக பைக்கில் போன 4 இளைஞர்கள் பரிதாபமாக வானில் அடிபட்டு பலியாகியுள்ளனர். அதேபோல தாமிரபரணி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கிப் பலியானார்கள்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரையை சேர்ந்த முகமது அனிபா மகன் சிராஜூதீன் (27, அதே ஊரை சேர்ந்த இஸ்மாயில் (30), ஷேக் முகம்மது (28) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையநல்லூரில் இருந்து நேற்று மதியம் சொக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் மேலக்கடையநல்லூரை சேர்ந்த முத்துநாராயணசாமி (27), முத்துச்சாமிபுரம் மகாராஜன் (30) ஆகிய இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இரு தரப்புக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதனால் அந்த சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் போனவர்கள் பயந்து ஒதுங்கியுள்ளனர். இந்த நிலையில், எதிரில் குற்றாலத்தில் இருந்து வான் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வானில் மதுரை சிம்மக்கல் பழவியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருந்தனர். இவர்கள் சுற்றுலாவாக வந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணாபுரம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக வேகமாக வந்து கொண்டிருந்ததைப் பார்த்த வேன் டிரைவர் மிரண்டு வேகமாக பிரேக் போட்டார். இதில் வேன் நிலை தடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த நேரத்தில் படு வேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில், சிராஜூதீன், இஸ்மாயில், மகாராஜன், முத்துநாராயணசாமி ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். ஷேக் முகம்மது படுகாயமடைந்தார். அவரது மூட்டு விலகிப் போய் விட்டது. அதேபோல வேன் கவிழ்ந்ததில் அதில் இருந்த 11 பேர் காயமடைந்தனர்.

ஷேக் முகம்மது ஆபத்தான நிலையில் ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எம்எல்ஏ முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் பைஷல் தலைமையில் அந்த அமைப்பின் தொண்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, தென்காசி கோட்டாசியர் வெங்கடேஷ், கடையநல்லூர் தாசில்தார் நாகராஜ் ஆகியோர் அங்கு வந்தபோது, விபத்து நடந்த இடத்திலிருந்து எடுத்து வரப்பட்ட காயமடைந்த சேக் முகம்மதுவின் மூட்டு சிப்பியை மாவட்ட தலைவர் பைஷல் அவர்களிடம் கொடுத்து மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து சப் கலெக்டர் அருகே உள்ள பழக்கடைக்கு சென்று ஐஸ் வாங்கி பதப்படுத்தி தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் மூலமாக நாகர்கோவில் மருத்துவமனைக்கு தனியாக விழுந்து கிடந்த மூட்டு சிப்பியை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்ததார்.

ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி இதற்கிடையே, பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியானார்கள். நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது காரையார் சொரிமுத்தையனார் கோவில். இங்கு விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை தினமாகிய நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் காரையார் சொரிமுத்தையனார் கோவிலுக்கு வந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் கோவில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றல் குளித்துக் கொண்டிருந்தனர். இதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பழனிவேல் (24), ஜெயப்பிரகாஷ் (17), ஜோதிவேல் (17) ஆகிய மூன்று பேரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்கள். உடனடியாக பழனி வேல் முருகன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உடல்கள் மீட்கப்பட்டன. தீயணைப்பு துறையினரின் தீவிர தேடுதலுக்குப் பின்னர் ஜோதிவேல் உடல் மீட்கப்பட்டது.

மூலக்கதை