மைசூர் ராஜவம்சத்தின் 27 ஆவது மன்னருக்கு இன்று கோலாகல திருமணம் (Video, Photos)

TAMIL CNN  TAMIL CNN

மைசூர் அரசகுலத்தின் 27-வது மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கும் ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் ராஜவம்சத்தை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் சிங் – மஹேஷ்ரி குமாரி தம்பதியரின் மகளான திரிஷிகா என்பவருக்கும் மைசூர் அம்பா விலாஸ் அரண்மனையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

19-ம் நூற்றாண்டில் (யதுவம்ச) உடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் மைசூர் நகரம் சிற்றரசாக இருந்து வந்தது. நரசராஜ உடையார் மற்றும் சிக்க தேவராய உடையார் ஆகிய அரசர்களின்கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின்கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.

பின்னர், பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. மைசூர் மன்னர்கள் ஆண்டகாலத்தில் அவர்களின் அரண்மனையாக இருந்த பிரமாண்ட மாளிகை மைசூர் நகரில் அமைந்துள்ளது. தசரா திருவிழா மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளின் மாலை வேளைகளில் ஒருமணி நேரமும் இந்த மாளிகை மின்விளக்கின் அலங்காரத்தில் ஜொலிக்கும். இதை பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனைக்கு வருவதுண்டு.

மைசூர் மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு யாரும் இல்லாததால் பல மாத காலமாக மைசூர் அரண்மனையின் அடுத்த வாரிசு யார்? என்ற குழப்பம் ராஜ குடும்பத்தில் நிலவி வந்தது.

இந்நிலையில், காலஞ்சென்ற மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரின் மூத்த சகோதரியான காயத்ரி தேவியின் பேரனான யடுவீர கோபாலராஜே அர்ஸ் என்பவரை அடுத்த வாரிசாக நியமிப்பது என ராஜ குடும்பத்தினர் முடிவு செய்தனர். 23 வயது இளைஞரான இவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மாசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்று வந்தார்.

இவரை மைசூர் சமஸ்தானத்தின் அடுத்த அரசராக அறிவிக்கும் தத்தெடுக்கும் சடங்கு நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு மைசூர் அரண்மனையில் நடைபெற்றது. மறைந்த மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரின் மனைவியான ராணி பிரமோதா தேவி அவரை சம்பிரதாயப்படி, தனது மடியில் அமர வைத்து, யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என்னும் புதிய பெயரை சூட்டினார்.

பின்னர், வெள்ளி தேரில் ஏறி அரண்மனை வளாகத்தை புதிய மன்னர் சுற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியில் புதிய மன்னரின் பெற்றோர், கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் ராஜ குடும்பத்தை சேர்ந்த சுமார் 37 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். புதிய மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கு கடந்த மே மாதம் முறைப்படி முடிசூட்டு விழாவும் நடைபெற்றது.

எனினும், ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாருக்கு கொள்ளி போட்ட காந்தாராஜ் உடையாருடன் பெரிய சட்ட போராட்டத்தை நடத்தி, வெற்றி பின்னரே மைசூர் ராஜாவின் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு புதிய மன்னர் பூரண உரிமை கோர முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மைசூர் அரசகுலத்தின் 27-வது மன்னராக பதவியேற்றுள்ள யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கும் ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் ராஜவம்சத்தை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் சிங் – மஹேஷ்ரி குமாரி தம்பதியரின் மகளான திரிஷிகா என்பவருக்கும் மைசூர் அரண்மனையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் திருமணம் நடைபெற்றது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக மைசூர் அரண்மனையில் நடக்கும் இந்த திருமண விழாவில் பங்கேற்க சுமார் ஆயிரம் பேருக்கு மட்டும் அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. அழைப்பிதழ்களுடன் வந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் பிரதான வாயில் வழியாக அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்கள், 1399-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டுவரை மைசூரை ஆண்டு மறைந்த மன்னர்களை தங்களது குலதெய்வமாக வணங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை