அமிதாப், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்கள் வெளிநாடுகளில் ரகசிய முதலீடா? விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
அமிதாப், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்கள் வெளிநாடுகளில் ரகசிய முதலீடா? விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு

நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட இந்திய பிரமுகர்கள் பலர் வெளிநாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் ஞாயிற்றுக்கிழமை 'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அதில், உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ரஷ்ய அதிபர் புடின், கால்பந்தாட்ட வீரர் லியானல் மெஸ்சி உட்பட பல்வேறு முக்கிய நபர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி,

இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் உள்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கின்றன.

விரைவில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட கூட்டம் தொடங்கவிருக்கும் நிலையில், பனாமா ஆவணங்கள் பற்றிய தகவல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பனாமா ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று காலை விவாதித்தார்.

அப்போது மத்திய நேரடி வரிகள் வாரியம், ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு அமைப்பு, வெளிநாட்டு வரிகள் மற்றும் வரிகள் ஆய்வுத்துறையினர் கொண்ட குழு ஒன்றை அமைத்து இதுபற்றி தீவிரமாக விசாரிக்கும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது,மத்திய அரசின் குழு தொடர்ந்து இந்த கணக்குகள் பற்றி ஆய்வு செய்வார்கள்.

இதில் முறைகேடாக ஏதாவது நடந்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று வெளியானது போலவே இன்னும் பலருடைய பெயர்கள் வெளியாகலாம். இந்த தகவல்களை வரவேற்கிறேன். அப்போதுதான் இதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக அமிதாப் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முறைகேடு குற்றச்சாட்டு அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை