வெளிநாட்டில் கடன் வாங்கிய அமைச்சர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
வெளிநாட்டில் கடன் வாங்கிய அமைச்சர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

வெளிநாட்டு வங்கியில் ரூ.100 கோடி கடன் வாங்கி, திருப்பி செலுத்தாத வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய அமைச்சர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும், யாலாமன்ச்சிலி சத்தியநாராயணா சவுத்ரிக்கு சொந்தமான பல நிறுவனங்களில் ஹெய்ஸ்ட்டியா ஹோல்டிங்ஸ் என்ற பங்குச்சந்தை நிறுவனமும் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் லண்டனில் உள்ள மொரீஷியஸ் வங்கியில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது.

மேற்படி கடன்தொகைக்கு சுஜானா குழுமம் ஜாமின்தாரராக கையொப்பமிட்டுள்ளது.

இந்நிலையில், வாங்கிய கடனை உரிய தவணைகளில் திருப்பி செலுத்த ஹெய்ஸ்ட்டியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தவறிவிட்டதால், சுஜானா குழும தலைமை நிறுவனத்தின்மீது லண்டன் கோர்ட்டில் மொரீஷியஸ் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும், லண்டன் நீதிமன்றத்திடம் உத்தரவு பெற்று, இதே குற்றச்சாட்டின்கீழ் ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத்தில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் யாலாமன்ச்சிலி சத்தியநாராயணா சவுத்ரிக்கு ஐதராபாத், நாம்பள்ளியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜர் ஆகவில்லை.

எனவே, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நேற்று நீதிபதி பிறப்பித்துள்ளார்.

தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு தொடர்பாக நேற்றிரவு அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர், எனக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாக இப்போதுதான் தகவல் கிடைத்தது.

ஒரு அமைச்சராக பொதுநலன் கருதி நான் ஆற்றவேண்டிய பணிகளில் மூழ்கிப்போனதால் இவ்வழக்கு தொடர்பான முந்தைய விசாரணைகளின்போது என்னால் ஆஜராக இயலவில்லை.

நீதித்துறையின்மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். வேண்டுமென்றே ஆஜராகமல் இருக்க வேண்டும் என ஒருபோதும் நான் கருதியதில்லை.

மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு எப்போதுமே நான் கட்டுப்பட்டு நடப்பேன் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை