திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வருமா? (வீடியோ இணைப்பு)

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வருமா? (வீடியோ இணைப்பு)

இந்திய கோயில்களில் அதிக மக்கள் கூடுவதிலும் அதிக வருமானம் ஈட்டுவதிலும் திருப்பதிக்கு ஈடாக எந்த கோயிலும் இல்லை.

பழமையும் பெருமையும் வாய்ந்த பாறை அமைப்பில், திருமலை உலகிலேயே இரண்டாம் இடத்தில் உள்ளது.

அத்தகைய அழகிய மலைமீது கோயில் இருப்பதால் ஒரு சுற்றுலா கலந்த ஆன்மீக வழிபாடாக பயணம் அமைவதும் பக்தர்கள் பெருமளவில் இங்கு குவிவதற்கு காரணம்.

திருப்பதி அமைவிடம்

இந்தியாவில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கே உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் திருப்பதி திகழ்கிறது.

மலைமீது உள்ள ஸ்ரீவெங்கடாஜலபதியின் கோயில் திருமலை எனவும், கீழே ஸ்ரீபத்மாவதி தாயாரின் கோயில் திருப்பதி எனவும் இரு நகரங்களாக விளங்கினாலும் திருப்பதி என்ற பெயரிலேயே இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறது.

கீழ் திருப்பதி, மேல் திருப்பதி என இரு பகுதிகளும் திருப்பதியின் இரு பாதிகளாகவே மக்களால் போற்றப்படுகிறது.

திருமலை ஏழுமலையான் கோபுர மண்டபத்தின் மேற்பகுதி முழுதும் தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

திருப்பதி சொல் விளக்கம்

திரு+பதி, திரு என்ற தமிழ்ச்சொல்லுக்கு செல்வம், புனிதம், மகிமை, மேன்மை போன்ற பொருள் பெறும். பதி என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கணவன் என பொருள்.

திருப்படி என்ற சொல்லே திருப்பதியாக மருவியது என்றும் கூறுவர். திருமலையில் ஏழு சிகரங்கள் இருப்பதால் ஏழுமலை என்று தமிழிலும், ஏடு கொண்டலு என தெலுங்கிலும் பெயர்.

இந்த ஏழு மலைகளும் ஆதிசேசனின் ஏழுதலைகளாக கருதப்படுவதால், சேசாசலம் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்மோற்சவ திருவிழா

திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் பவுர்ணமியில் இந்த திருவிழா நடக்கிறது. இது தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இங்கு தினமும் அதிகாலையில் வெங்கடேஷ சுப்பிரபாதம் (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்புகிறார்கள் மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு, திருப்பாவை பாசுரங்கள் ஒலிபரப்புகின்றனர்.

திருப்பதி லட்டு

திருப்பதி என்றாலே ஏழுமலையானுக்கு அடுத்தப்படியாக லட்டு, மொட்டை, உண்டியல்தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு லட்டு பிரசாதம் மக்களை ஈர்த்துள்ளது.

இங்கு தயாரிக்கப்படும் லட்டு பிரத்தியேக முறையில் செய்யப்படுகிறது. அதுபோல வேறுயாரும் தயாரிக்காமல் இருக்க புவிசார் குறியீடு காப்புரிமை பெற்றதாகும்.

கடலைப்பருப்பு, சர்க்கரை, நெய், முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருள்களால் மிகவும் சுவையாக இங்கு லட்டு தயாரித்து பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

1931 ம் ஆண்டு கல்யாணம் ஐயங்கார் என்பவரே லட்டை இங்கு அறிமுகம் செய்தார்.

திருப்பதி வரலாறு

திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடம். கி.மு. 500-300 நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமலை கோயில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என சரியாக தெரியவில்லை என்றாலும், தொண்டைமான் என்ற பல்லவ மன்னனால் முதன்முதலாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கி.பி. 4 ம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், கி.பி. 5 ம் நூற்றாண்டிலிருந்து 10 ம் நூற்றாண்டு வரை சோழர்களாலும் கி.பி. 17 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசாலும் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

திருப்பதி வைணவர்களால் ’கலியுக வைகுண்டம்’ என்று அழைக்கப்படுகிறது. பதினோறாம் நூற்றாண்டில் ராமானுஜரால் இங்கு ஆச்சார அனுஷ்டானங்கள் முறையாக்கப்பட்டன. ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த இரண்டாவது முக்கிய வைணவ தலமாக இது போற்றப்படுகிறது.

படையெடுப்புகளில் தப்பியது

முஸ்லீம்களின் படையெடுப்பின் போது, தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயில், அரங்கநாத சுவாமி கோயில் உட்பட பல கோயில்கள் சூறையாடப்பட்டன. ஆனால், திருப்பதி தப்பியது.

முஸ்லீம்கள் மேலே இருப்பது என்ன கோயில் என்று கேட்டதற்கு மக்கள் பன்றி (வராக அவதாரம்) கோயில் என்று சொன்னதால் பன்றியை வெறுக்கும் முஸ்லீம்கள் மேலே செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

திருப்பதிக்கு வழிகள்

திருப்பதியில் விழாக்காலங்களிலும் கோடை விடுமுறையிலும் மக்கள் கூட்டம் வழியும். தர்ம தரிசனத்துக்கு ஒரு நாளை கடந்தும் காத்திருக்க நேரும். அதனால், சுற்றுலா மனநிலையில் செல்பவர்கள் மற்ற நாட்களில் செல்வது நல்லது.

திருப்பதிக்கு அருகில் உள்ள வெளிநாட்டு விமான நிலையம் என்றால் சென்னைதான். திருப்பதியிலிருந்து சென்னை 130 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்பதியில் 15 கி.மீ. தூரத்தில் உள்நாட்டு விமான நிலையம் உள்ளது

அங்கிருந்து பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், டெல்லிக்குச் செல்லலாம்.

திருப்பதியில் இருந்து அருகில் உள்ள அனைத்து பெரிய நகரங்களுக்கும் ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.

கவிஞர் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமத நூலில் ’திருப்பதிக்கு சென்றுவந்தால் திருப்பம் ஒன்று நேருமடா’ என்று தனக்கு நேர்ந்த அனுபவ அறிவோடு வலியுறுத்துகிறார்.

ஆன்மீக தலமாக மட்டுமல்லாமல் இனிய சுற்றுலா சுகம் தரும் மலையாகவும் இருப்பதால், ஒருமுறையாவது அங்கு செல்வது அனுபவிப்பே.

-மருசரவணன்

மூலக்கதை