சாதி ரீதியான விமர்சனம்: வைகோவுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் (வீடியோ இணைப்பு)

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
சாதி ரீதியான விமர்சனம்: வைகோவுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் (வீடியோ இணைப்பு)

சாதி ரீதியாக கலைஞர் கருணாநிதியை தாக்கி பேசிய வைகோவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

நேற்று தாயகத்தில் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சந்திரகுமாரை கடுமையாக தாக்கி பேசினார்.

குறிப்பாக கலைஞர் கருணாநிதி பற்றி சாதி ரீதியாகவும், குலத் தொழில் செய்யலாம் எனவும் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

வைகோவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

அரசியலிலே அநாகரிகமான பேச்சு. வைகோவின் பேச்சு மிகவும் வேதனை தருவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட அரசியலை நடத்துகின்ற கட்சிகளை துடைத்தெறியவேண்டும் தமிழகத்தில். நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன்

வைகோ திடீரென்று கடந்த ஒரு வார காலமாக தன்னை மறந்து, தன்னை இழந்து நிதானம் தவறி நடந்து கொள்கிறார். பத்திரிக்கை நிருபர்களிடமும் அப்படித்தான் நடந்திருக்கின்றார். நேற்று பார்தீர்கள் என்றால் பேண்ட்டையும், சட்டையும் போட்டுக்கொண்டு, தலையில் முக்காடையும் போட்டுக்கொண்டு அநாவசியமாக போலீஸ் அதிகாரியிடம் சண்டை போட்டிருக்கிறார்.

இன்றைக்கு தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு மூத்த தலைவராக, தமிழர்களுக்கு, தமிழ் சமுதாயத்திற்கு இருக்கக் கூடியவர் டாக்டர் கலைஞர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் மதிக்கக்கூடிய அவரை ஒருமையில் பேசியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அது உண்மை என்று சொன்னால், எனக்கு வைகோ மீது இருந்த கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் போய்விட்டது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

நிதானம் இழந்து நிலையில் அவர் பேசுவது, மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்கிற முறையில் அவர் சொல்லக் கூடிய கருத்துக்கள் மக்களிடம் தெரிகிறது. பேசுவதை அளந்து பேசவேண்டும் என்பதை புரிந்தவர்கள் இனி எதிர்காலத்தில் பேச வேண்டும்.

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்

அரசியலில் இருப்பவர்கள் நாகரிகமாக பேச வேண்டும். நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அதும் முதிர்ந்த அரசியல்வாதிகளை தரக்குறைவாக பேசக் கூடாது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

தேமுதிக கட்சியை உடைப்பதற்கு திமுகவின் துண்டுதலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வைகோ விமர்சித்தார். அச்சமயம் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

விசிக கட்சியின் ஊடக தொடர்பாளர் வன்னி அரசு

குறிப்பிட்ட சாதியின் தொழிலை குறிவைத்து பேசுவது ஏற்புடையதல்ல. தலித்துகளை பறையடிக்கத்தான் வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா. இது போன்ற கருத்துக்கள் சமூகத்தில் இல்லாத நிலை வேண்டும்.

இதை வைத்துக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று யாரும் கருத வேண்டாம்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரசியலில் எந்த தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், ஒரு தலைவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும் போது அவை நாகரீகமாகவும், சம்பந்தப்பட்ட தலைவரே தாம் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் சூழலை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும்.

கலைஞர் மற்றும் திமுக மீது வைகோ முன்வைத்த குற்றச்சாற்றைக் கூட நாகரிகமான வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால், காழ்ப்புணர்ச்சியின் மிகுதியில் வைகோ உதிர்த்த கண்ணியமற்ற வார்த்தைகள் நாகரிக சமுதாயத்தில் எவராலும் ஏற்றுகொள்ள முடியாதவை.

இதற்காக அவர் கலைஞரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும், வார்த்தைகள் ஏற்படுத்திய மனக்காயத்தை மன்னிப்பு நிச்சயமாக குணப்படுத்தாது.

மூலக்கதை