திமுக-வுடன் கூட்டணி அமைக்காதது ஏன்?

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
திமுகவுடன் கூட்டணி அமைக்காதது ஏன்?

ஈரத்துண்டை போட்டு கழுத்தை அறுக்கும் வேலையை திமுக செய்யும் என்பதால்தான் அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் தேமுதிக கட்சியின் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன்.

சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தனித்து போட்டி என அறிவித்து பின்னர் மக்கள்நலக் கூட்டணியுடன் இணைந்தது.

ஆனால் பெரும்பாலான தேமுதிக தொண்டர்களின் சாய்ஸ் திமுக தான் எனவும், அதனாலேயே பலரும் மனு தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக-வுடன் கூட்டணி அமைக்காதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன்.

அவர் கூறுகையில், திமுக உடனான கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கேட்டது உண்மை தான்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது 9 எம்எல்ஏக்களை பணம் கொடுத்து அழைத்துச் சென்றனர். திமுகவுடன் கூட்டணி வைத்தால், அவர்களும் தேர்தலுக்குப் பிறகு இதைத்தான் செய்வார்கள் என்று முன்கூட்டியே சிந்தித்த விஜயகாந்த், திமுக கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்.

ஈரத்துண்டை போட்டு கழுத்தை அறுக்கும் வேலையை திமுக செய்யும் என்பதால்தான் அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை.

சந்திரகுமார் எனக்கு 25 ஆண்டு கால நண்பர். அவரைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. பொதுக்குழு, செயற்குழுவில் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவருக்கு அளிக்கிறோம் என்ற தீர்மானத்தை சந்திரகுமார்தான் வாசித்தார்.

இப்போது தலைமைக்கு துரோகம் செய்கிறார். எங்களை பொறுத்தவரை விஜயகாந்த்தான் கட்சி. எனவே, ம.ந.கூட்டணி - தேமுதிக அணிதான் வெற்றி பெறும்.

சந்திரகுமாரை நீக்கும் அதிகாரம் விஜயகாந்துக்கு உண்டு. திமுகவின் எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் மூலம்தான் சந்திரகுமார் உள்ளிட்டவர்களை இழுத்துச் செல்கின்றனர்.

இதனால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. தேமுதிகவை உடைக்கும் திமுகவுக்கு தேர்தலின்போது மக்கள் உரிய பதிலை சொல்வார்கள். திமுகவில் அதிருப்தியில் உள்ள கனிமொழியும் மு.க.அழகிரியும் தேமுதிகவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை