சிறுவனை விரட்டிச் சென்று கடித்து குதறிய பொலிஸ் நாய்: மன்னிப்பு கோரிய காவல்துறை (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
சிறுவனை விரட்டிச் சென்று கடித்து குதறிய பொலிஸ் நாய்: மன்னிப்பு கோரிய காவல்துறை (வீடியோ இணைப்பு)

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் கடந்த புதன்கிழமை அன்று விடுமுறையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பொலிஸ் நாயுடன் வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக தப்பிய பொலிஸ் நாய் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த வீட்டு தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

அங்கு 3 சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

மூவரையும் நோக்கி நாய் சென்றபோது, மூவரில் 12 வயதான ஒரு சிறுவன் நாயை பார்த்து அஞ்சி அங்கிருந்து தலை தெரிக்க ஓடியுள்ளான்.

பொலிஸ் நாயின் முன்னால் ஓடினால், அதுவும் துரத்தும் என்பதால் சிறுவன் ஓடுவதை கண்டு நாயும் அவனை துரத்திக்கொண்டு சென்றுள்ளது.

சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனை பின் தொடர்ந்து வந்த நாய் அவனது காலை கவ்வி குதறியுள்ளது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை நாயை விரட்டியபோது, நாயின் பராமரிப்பாளரும் அங்கு வந்து சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளார்.

இந்த சம்பத்தில் சிறுவனின் காலில் தையல்கள் போடும் அளவிற்கு நாய் கடித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று சிறுவனின் வீட்டிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிறுவன் மற்றும் அவனது தந்தையிடம் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும், நாயின் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்படும் என்றும், இதுபோன்ற ஒரு சம்பவம் இனி நடக்காது என பொலிசார் உறுதியளித்துள்ளனர்.

மூலக்கதை