நிலக்கரி ஊழல் வழக்கில் இஸ்பத் இயக்குனர்களுக்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை? ஏப்ரல் 4-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

மாலை மலர்  மாலை மலர்
நிலக்கரி ஊழல் வழக்கில் இஸ்பத் இயக்குனர்களுக்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை? ஏப்ரல் 4ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி, மார்ச் 31-

நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்பத் நிறுவன இயக்குனர்கள் ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலின்பேரில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., பல்வேறு நிறுவனங்கள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாரத் பராஷர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  அவற்றில் ஜார்க்கண்ட் இஸ்பத் நிறுவனம் மீதான வழக்கும் ஒன்று.

இந்நிறுவனம் மற்றும் இதன் இயக்குனர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் மீது தவறான தகவல்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இஸ்பத் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து இன்று வாதம் நடைபெற்றது. அப்போது, பொருளாதார குற்றங்கள் செய்துள்ள ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகிய இருவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார்.

தங்கள் கட்சிக்காரர்கள் எந்த சதிச்செயலிலும் ஈடுபடவில்லை என்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கத்தில் நிலக்கரி எடுக்காததால் ரூ.200 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு ஏற்கனவே தண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்களின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தண்டனை விவரம் ஏப்ரல் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்து, தீர்ப்பை ஒத்திவைத்தார்.

மூலக்கதை