மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 42 ஆண்டுகளாக 250 அரசு அதிகாரிகளுக்கு ஓசி டிக்கெட் - சுவாரசியமான பின்னணி

மாலை மலர்  மாலை மலர்
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 42 ஆண்டுகளாக 250 அரசு அதிகாரிகளுக்கு ஓசி டிக்கெட்  சுவாரசியமான பின்னணி

மும்பை, மார்ச் 31-

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 33 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க முடியும். இந்த மைதானத்தில் இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

மொத்தமுள்ள 33 ஆயிரம் டிகெட்டுகளில் 14 ஆயிரம் டிக்கெட்டுகள் நிதி ஆதாரமாக விளங்கும் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 19 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 42 ஆண்டுகளாக மகாராஷ்ட்ரா அரசு உயர் அதிகாரிகளுக்கு 250 இலவச டிக்கெட்கள் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 1978-ம் ஆண்டு மும்பை கிரிக்கெட் சங்கம் வான்கடே மைதானத்தை கட்ட முடிவு செய்தது. இதற்கான நிலத்திற்காக மாநில அரசிடம் புத்திசாலித்தனமாக ஒரு டீல் பேசியது. இந்த ஒப்பந்தத்தின் படி நிலத்திற்கு பணம் கொடுக்காமல் ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்கு 250 டிக்கெட்டுகளை இலவசமாக கொடுக்க முன்வந்தது கிரிக்கெட் சங்கம்.

அதிகாரிகளுக்கும் இந்த டீல் பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டனர். ஆனால் புத்திசாலித்தனமாக இந்த ஓசி டிக்கெட் எத்தனை ஆண்டுகளுக்கு என்று ஆவணத்தில் வரையறை செய்யவில்லை. இதனால் மாநில உள்துறை செயலாளாரில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் வரை 42 ஆண்டுகளாக ஓசியில் கிரிக்கெட் பார்த்துவருகிறார்கள்.

இருதரப்புக்கும் லாபம் தரும் வகையில் மும்பை கிரிக்கெட் வாரியமும், அம்மாநில அரசு அதிகாரிகளும் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளனர்.

ஆனால், நிலத்தை குத்தகை அல்லது வாடகை அடிப்படையில் கொடுத்திருந்தால் இன்று அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானமாக வந்துகொண்டிருக்கும். அதேபோல் பல ஆயிரம் கொடுக்க தயாராக இருக்கும் ரசிகர்களும் டிக்கெட் கிடைக்காமல் மைதானத்திற்கு வெளியில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

மூலக்கதை