பிரச்சினைகளை கண்டு ஓடாததற்காக பிரதமர் மோடி என்னை பாராட்டினார்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி

மாலை மலர்  மாலை மலர்
பிரச்சினைகளை கண்டு ஓடாததற்காக பிரதமர் மோடி என்னை பாராட்டினார்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பேட்டி

திருவனந்தபுரம், மார்ச். 31–

திருவனந்தபுரம் பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் களம் இறக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் பெட்டிங் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அவரை போட்டிகளில் விளையாட கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. ஆனால் டெல்லி கோர்ட்டு அவரை கடந்த ஆண்டு நிரபராதி என்று விடுதலை செய்தது.

இந்த நிலையில் அவர் பா.ஜ.க. வேட்பாளராக மாறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீசாந்த் அளித்துள்ள பேட்டி வருமாறு:–

நான் கிரிக்கெட்டில் எந்த தவறும் செய்யவில்லை. நான் அப்பாவி. கோர்ட்டு அதை உறுதி செய்து என்னை விடுதலை செய்தது. இந்த பிரச்சினையால் என் இமேஜ் பாதிக்கப்படவில்லை.

என்னை கவுரவிக்கும் வகையில் தலைநகரில் நான் போட்டியிடும் வாய்ப்பை பா.ஜ.க. வழங்கியுள்ளது. திருவனந்தபுரம் மக்களின் மனதில் இடம் பெறும் வகையில் நான் மக்கள் பணி செய்வேன்.

இதற்கு முந்தைய அரசுகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டும். அதை முன்நிறுத்தி பிரசாரம் செய்வேன்.

என்னை எதிர்த்து பிரசாரம் செய்பவர்கள் என் கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சையை எழுப்பி பிரசாரம் செய்யக்கூடும். ஆனால் திருவனந்தபுரம் தொகுதி மக்கள் நன்கு படித்தவர்கள். அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பிரதமர் மோடியை நான் சந்தித்தபோது அவர் என்னை வெகுவாக பாராட்டினார். கிரிக்கெட் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்ட போது அதை கண்டு பயந்து ஓடாமல் தைரியமாக சந்தித்தற்காக என்னை அவர் பாராட்டினார். தொடர்ந்து மக்கள் பணியாற்றும்படி அவர் என்னை உற்சாகப்படுத்தினார்.

திருவனந்தபுரத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே இப்போது என் முன் உள்ள இலக்காகும். அரசியல் களம் எனக்கு புதிது. என்றாலும் மக்களுக்காக சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன்.

பா.ஜ.க மேலிட தலைவர்கள் எனக்கு அனுமதி கொடுத்து, மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

மூலக்கதை