ராமநாதபுரத்தில் கட்டிட பொறியாளரிடம் ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் மோசடி: வங்கி மேலாளர்கள் மீது புகார்

மாலை மலர்  மாலை மலர்
ராமநாதபுரத்தில் கட்டிட பொறியாளரிடம் ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் மோசடி: வங்கி மேலாளர்கள் மீது புகார்

ராமநாதபுரம், மார்ச். 31–

கட்டிட பொறியாளரிடம் ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர்கள் மீது புகார் கூறப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர் முகமது கனி. இவரது மகன் காதர் மீரா, கட்டிட பொறியாளர்.

இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் எனக்கு கணக்கு உள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வந்து டெபாசிட் பணத்தை பெற்று செல்லும் வசதி உள்ளது.

அதன்படி வந்த வர்த்தக மேலாளர் பரணிகாந்த் வசம் 4 தவணைகளாக ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளேன். இந்த சூழலில் எனது கணக்கில் இருந்து காசோலைகள் மூலம் ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. குறிப்பிட்ட காசோலைகள் என்னிடம் இருக்கும்போது பணம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி அடைந்து வங்கி மேலாளர் மணிமொழியனை சந்தித்து புகார் கூறினேன்.

அப்போது நான் டெபாசிட் செய்ய வழங்கிய ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் எனது கணக்கில் வரவு வைக்கப்படாதது தெரியவந்தது. ஆக மொத்தம் ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை