தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் 12–ந் தேதி ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா பேட்டி

மாலை மலர்  மாலை மலர்
தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் 12–ந் தேதி ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா பேட்டி

நாகை, மார்ச்.31–

வேதாரண்யத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் அம்பாள் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் தென்னரசு முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சுபஹானி வரவேற்றார். கூட்டத்தில் வேதாரண்யம், நாகை, வேளாங்கண்ணி, நாகூர், கீவளுர், தாணிக்கோட்டகம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்துகொண்டன.

இதில் பங்கேற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்புதலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது–

தேர்தலில் வணிகர்கள் பணம் வாங்கக்கூடாது என உறுதியாக இருக்க வேண்டும், பணம் கொடுப்பதை தடுப்பதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். தி.மு.க, மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க. ஆகிய கட்சிகள் வணிகர்களின் குறைகளை கேட்டுள்ளனர்.

ஆனால் அ.தி.மு.க.வினர் இதுவரை கேட்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரளிப்போம். மே 5ல் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு அறிவிப்போம்.

தேர்தல் கமிஷன், பறக்கும் படையினர் வணிகர்கள் பாதிக்கும் அளவிற்கு சோதனைகள் நடைபெறுகிறது. இதனைக் கண்டித்து திருச்சியில் வருகிற 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மோகன், மண்டல தலைவர் செந்தில்நாதன், கூடுதல் செயலாளர் வேலு, மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் மன்சூர்ஷா நன்றி கூறினார்.

மூலக்கதை