திருப்பதி அன்னதான திட்டத்துக்கு ரூ.687 கோடி குவிந்தது

மாலை மலர்  மாலை மலர்
திருப்பதி அன்னதான திட்டத்துக்கு ரூ.687 கோடி குவிந்தது

நகரி, மார்ச். 31–

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் பக்தர்களுக்கு இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

1985–ம் ஆண்டு தினமும் 2 ஆயிரம் பேருக்கு என வழங்கப்பட்டு வந்த அன்னதானம் தற்போது சாதாரண நாட்களில் தினமும் 1.20 லட்சம் பக்தர்களுக்கு திருவிழா காலங்களில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்களுக்கும், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமாக ஒரே பந்தியில் அமர வைத்து சுவையான உணவு பரிமாறப்படுகிறது.

அன்னதானம் வழங்க தேவஸ்தானம் சார்பில் தனியாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கு வழங்கப்படும் நன்கொடை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. மற்ற திட்டங்களை விட அன்னதான திட்டத்துக்கு அதிக தொகை கிடைக்கிறது.

கடந்த 5 ஆண்டில் மட்டும் ரூ.385 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

இதுவரை இந்த அறக்கட்டளையில் ரூ.687 கோடி உள்ளது இந்த வாரம் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.60 கோடி வட்டி கிடைக்கிறது.

அன்னதானத்துக்கு ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவிடப்படுகிறது. பற்றாக்குறை தொகை பொது நிதியில் இருந்து தேவஸ்தானம் ஒதுக்குகிறது.

நித்திய அன்னதானம் மட்டும் அல்லாமல் தரிசன கியூவில் நிற்கும் பக்தர்களுக்கு பால், மோர், சிற்றுண்டி போன்றவைகளும், தேவஸ்தான மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு, திருச்சானூர் கோவில் பக்தர்களுக்கு 2 வேளை பிரசாதம் போன்றவைக்குரிய செலவும் இந்த அறக்கட்டளை நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது.

அன்னதான அறக்கட்டளை நிதியை ரூ.1000 கோடியாக உயர்த்த தேவஸ்தானம் திட்டமிட்டு இருப்பதாக முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் கூறினார்.

மூலக்கதை