பதான்கோட் தாக்குதலுக்கும் மசூத் அசாருக்கும் தொடர்பு இல்லை: பாகிஸ்தான் விசாரணை குழு

மாலை மலர்  மாலை மலர்
பதான்கோட் தாக்குதலுக்கும் மசூத் அசாருக்கும் தொடர்பு இல்லை: பாகிஸ்தான் விசாரணை குழு

புதுடெல்லி, மார்ச்.31–

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 2–ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது இயக்கத் தலைவன் மசூத் அசார் உத்தரவின் பேரில் இந்த நாசவேலை நடந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து அந்த இயக்க தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்தியா வலியுறுத்தியது.

பாகிஸ்தான் அரசு அதை ஏற்றது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதான்கோட் பகுதியில் ஆய்வு செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. அதற்கு இந்தியா சம்மதித்தது.

அதன்பேரில் பாகிஸ்தான் விசாரணைக்குழு இந்தியா வந்துள்ளது. வரும் 2–ந் தேதி வரை அந்த குழுவினர் இந்தியாவில் தங்கியிருந்து தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர். இன்று அவர்கள் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்தனர்.

இதற்கிடையே பதான் கோட்டில் ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த தேவையான ஆவணங்களை பாகிஸ்தான் விசாரணைக் குழுவிடம் தேசிய புலனாய்வுக்குழுவினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் ஜெய்ஷ் – இ – முகமது இயக்கத் தலைவன் மசூத் அசார் குரல் மாதிரியை தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் பாகிஸ்தானில் கூட்டு விசாரணை குழு அதிகாரிகள் இந்தியா சொல்லும் குற்றச்சாட்டுக்களை இதுவரை முழுமையாக ஏற்கவில்லை. எனவே மசூத் அசாரின் குரல் மாதிரியை இந்தியாவிடம் பாகிஸ்தான் தருமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மசூத் அசாருக்கு ஆதரவாக பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு கருத்து வெளியிட்டுள்ளது. பதான்கோட் தாக்குதலுக்கும் மசூத் அசாருக்கும் நேரடி தொடர்பு இருப்பதை உறுதிபடுத்த இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் விசாரணை குழுவினர் கூறி உள்ளனர்.

அவர்கள் குர்தாஸ்பூர் முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர் சிங் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தேசிய புலனாய்வு குழு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

மூலக்கதை