காணாமல் போனதாக கூறப்பட்ட தாஜ்மகால் கலசம் பழுதுபார்ப்பதற்காக இறக்கப்பட்டது: தொல்லியல் துறை விளக்கம்

மாலை மலர்  மாலை மலர்
காணாமல் போனதாக கூறப்பட்ட தாஜ்மகால் கலசம் பழுதுபார்ப்பதற்காக இறக்கப்பட்டது: தொல்லியல் துறை விளக்கம்

ஆக்ரா, மார்ச்.31-

டெல்லி அருகே ஆக்ராவில் கட்டப்பட்டு உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மகாலில் தற்போது பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் தாஜ்மகாலை சுற்றியுள்ள 4 ஸ்தூபிகளில் ஒரு ஸ்தூபியின் உச்சியில் இருந்த கலசம் காணாமல் போய் இருந்தது.

இந்த கலசம் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்து பல துண்டுகளாக உடைந்ததாக நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் வலைத்தளவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த தகவலை மறுத்து தொல்லியல் துறை நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இது குறித்து அந்த துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தாஜ்மகாலில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட அந்த கலசத்தின் இரும்பு பட்டை துருப்பிடித்து, கலசம் வலுவிழந்து இருந்தது தெரியவந்தது. எனவே அதை பழுதுபார்ப்பதற்காக கீழே இறக்கப்பட்டது’ என்று தெரிவித்தனர்.

கலசத்தை உறுதிப்படுத்த அதில் புதிதாக சாந்து நிரப்பப்பட்டு மீண்டும் ஸ்தூபியில் நிறுவப்படும் எனவும் தொல்லியல் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். 

மூலக்கதை