2 பெண்களை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு

மாலை மலர்  மாலை மலர்
2 பெண்களை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு

கோவை, மார்ச்.31-

ஆனைமலை அருகே கொலை வழக்கில் சாட்சி கூறியவரின் குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சுப்பேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும், ஆழியாறு பகுதியை சேர்ந்த கனகராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜீவ்காந்தி 2005-ம் ஆண்டு கனகராஜை கொலை செய்தார்.

இந்த வழக்கு கோவை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராஜீவ்காந்தியின் வீட்டின் அருகே வசித்து வரும் தொழிலாளி முருகன் (60) அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ்காந்திக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர் அவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால், ஆயுள்தண்டனை 7 வருடமாக குறைக்கப்பட்டது. இதனால் ராஜீவ்காந்தி தண்டனை முடிந்து வெளியே வந்தார்.

கொலை வழக்கில் தனக்கு எதிராக முருகன் சாட்சியளித்ததால் ராஜீவ்காந்தி ஆத்திரம் அடைந்தார். இதனால் தகராறு செய்ய ராஜீவ்காந்தி முடிவு செய்து, முருகனிடம் உனக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு கொடு என்று கேட்டார்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. ராஜீவ்காந்தி அடிக்கடி முருகன் வீட்டிற்கு சென்று அவர்களிடம் இடத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

இந்த நிலையில் 11-2-2012 அன்று முருகனின் மனைவி பழனியம்மாள் (55), மகள்கள் ஜோதிமணி (31), மகுடீஸ்வரி (28) ஆகியோர் தங்களுடைய வீட்டின் அருகே நடந்து சென்றனர். அப்போது ராஜீவ்காந்தி தனது சித்தப்பா கே.ஜோதிமணியுடன் (59) மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். பின்னர் ராஜீவ்காந்தி தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் பழனியம்மாள், ஜோதிமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மகுடீஸ்வரி படுகாயம் அடைந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்த முருகன், அவருடைய மகன் மணிகண்டன் (26) ஆகியோர் ஓடி வந்தனர். அப்போது ராஜீவ்காந்தி உங்களையும் வெட்டிவிடுவேன் என்று மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் சித்தப்பா கே.ஜோதிமணியுடன் ஏறி தப்பிச்சென்றார்.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக ராஜீவ்காந்தி, கே.ஜோதிமணி ஆகியோர் மீது ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் போது கே.ஜோதிமணி இறந்து விட்டார். இதனால் ராஜீவ் காந்தி மீது மட்டும் வழக்கு நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.விஜயா நேற்று ராஜீவ்காந்திக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், இரு பெண்களை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையும், மற்றொரு பெண்ணை வெட்டி படுகாயப்படுத்தியதற்காக ஆயுள் தண்டனையும் ராஜீவ்காந்திக்கு விதிக்கப்படுகிறது. மேலும் முருகன், மணிகண்டனுக்கு கொலைமிரட்டல் விடுத்ததால் ராஜீவ்காந்திக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து ராஜீவ்காந்தியை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மூலக்கதை