டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இங்கிலாந்திற்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

மாலை மலர்  மாலை மலர்
டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இங்கிலாந்திற்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

புதுடெல்லி, மார்ச் 30-

டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் முதலில் பந்து வீச முடிவு செய்ததாக மோர்கன் தெரிவித்தார். ஆனால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ‘நாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்போம்’ என்று கூறியிருந்தார்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சனும், கப்திலும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். கப்தில் அதிரடியாக ஆடி ரன் குவிக்க முயன்று 15 ரன்னில் டேவிட் வில்லி பந்தில் ஆட்டமிழந்தார். வில்லியம்சனும், முன்ரோவும் பாட்னர்சிப் அமைத்து மேலும் விக்கெட் விழாமல் தடுத்தனர். ஆனால் நியூசிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது.

அணியின் ஸ்கோர் 91 ஆக இருந்த போது வில்லியம்சன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்ரோ 47 ரன்கள் எடுத்திருந்த போது பிளாங்கெட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆல் ரவுண்டர் கோரி ஆண்டர்சன் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் வீழ்ந்தார்.

இதன் பிறகு களமிறங்கிய ராஸ் டெய்லர், எலியட், ரோன்ச், மிட்செல் சான்ட்னெர், மிட்செல் மெக்லேனகன் ஆகியோரால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளித்து ரன் குவிக்க முடியவில்லை. இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

மூலக்கதை