பாரீஸ் தாக்குதல் எதிரொலி: சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிடுவதாக பிரான்ஸ் அறிவிப்பு

NEWSONEWS  NEWSONEWS
பாரீஸ் தாக்குதல் எதிரொலி: சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிடுவதாக பிரான்ஸ் அறிவிப்பு

கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.

பிரான்ஸின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாகவும் அதனால் தான் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்கவும் தீவிரவாத தாக்குதலை கட்டுப்படுத்தும் விதத்தில் அந்நாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் ஜனாதிபதி பிராங்கோஸ் ஹாலண்டே முடிவு செய்தார்.

பிரான்ஸில் அவசர நிலையை மேலும் அதிகரிப்பது, தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களின் பிரான்ஸ் குடியுரிமையை பறிப்பது போன்றவை இந்த திருத்தத்தில் இடம் பெற்றிருந்தது.

எனினும் எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் இந்த சட்டத்திருத்தத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அந்நாட்டு ஜனாதிபதி பிராங்கோஸ் ஹாலண்டே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுவது தொடர்பான திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது பிரான்ஸில்  போடப்பட்டுள்ள அவசர நிலை மே 26 திகதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை