தேசிய விருது கிடைக்காதது விக்ரமுக்கு இழப்பல்ல: தேசிய விருதுக்குத்தான் இழப்பு: பி.சி.ஸ்ரீராம்

மாலை மலர்  மாலை மலர்
தேசிய விருது கிடைக்காதது விக்ரமுக்கு இழப்பல்ல: தேசிய விருதுக்குத்தான் இழப்பு: பி.சி.ஸ்ரீராம்

மத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒருபக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபுறம் வருத்தத்தையும் உருவாக்கியுள்ளது.

‘விசாரணை’ படத்துக்கு 3 தேசிய விருதுகள், ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக இளையராஜாவுக்கு விருது என அறிவித்தது மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறுபுறம் சிறந்த கலைஞர்களை தேசிய விருது குழு புறக்கணிக்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளது.

‘ஐ’ படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டி, குறைத்து அந்த கதாபாத்திரத்திற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த படத்திற்காக அவர் இரண்டரை வருடங்கள் கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்திருந்தார்.

இந்த வருடம் ‘ஐ’ படத்திற்காக கண்டிப்பாக விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும் என அனைவரும்  எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் விக்ரமின் பெயர் இடம்பிடிக்காதது சினிமா பிரபலங்கள் பலருக்கும் மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.

விக்ரமுடன் ‘ஐ’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இதுகுறித்து கூறும்போது, விக்ரமுக்கு ஒரு விருதும் இல்லை எனும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. தேசிய விருது குழு இதுபோல் நிறைய பிழைகள் செய்திருக்கின்றனர். இந்த விருது கிடைக்காதது விக்ரமுக்கு இழப்பல்ல, தேசிய விருதுக்குத்தான் இழப்பு என்று கூறியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் விக்ரமுக்கு தேசிய விருது அறிவிக்காதது குறித்து தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை