’கழிவறை செல்வதற்கு மேலாளரின் அனுமதி பெற வேண்டுமா?’: பிரான்ஸ் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி

NEWSONEWS  NEWSONEWS
’கழிவறை செல்வதற்கு மேலாளரின் அனுமதி பெற வேண்டுமா?’: பிரான்ஸ் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி

பிரான்ஸ் நாட்டில் உள்ள Blagnac என்ற நகரில் SFR-Numericable என்ற நிறுவனத்தின் கீழ் தகவல் பரிமாற்றம் செய்யும் மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு நாளில் 7 மணி நேரப்பணியும், இடையில் 30 நிமிடங்கள் ஓய்வும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மையம் கூடுதலான பணிகளை பெற்றுள்ளதால், அதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் அதிவேகமாக செய்து முடிக்க தலைமை நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனை செய்து முடிக்க ஊழியர்கள் அடிக்கடி இருக்கையை விட்டு செல்வதை தடுக்க வேண்டும் என தீர்மானித்து ஒரு அதிரடி உத்தரவை பிறபித்துள்ளனர்.

அதாவது, ‘கழிவறைக்கு ஊழியர்கள் செல்வதாக இருந்தால், அதற்கு முன்னதாக மேலாளருக்கு மின்னஞ்சல்(Email) அனுப்பி, அவரது அனுமதி கிடைத்த பின்னரே செல்ல வேண்டும்’ என்ற புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தலைமை நிர்வாகிகளின் இந்த உத்தரவு அனைத்து ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய ஊழியர்கள் பிரான்ஸில் இயங்கி வரும் CFDT என்ற தொழிலாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த சங்கத்தின் உறுப்பினரான Thierry Godec என்பவர் பேசுகையில், ‘பொதுவாக எந்த அலுவலகமாக இருந்தாலும் மேலாளர்கள் பாதி நேரம் இருக்கையிலேயே இருக்க மாட்டார்கள்.

இந்த நேரத்தில் அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்பி அதனை மேலாளர்கள் பார்க்காமல் இருந்தால், கழிவறைக்கு செல்ல வேண்டிய அந்த ஊழியரின் நிலமை மோசமாகிவிடும்.

மேலும், ஊழியர்களின் மீது இவ்வாறு மோசமான விதிமுறைகளை திணிப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விதிமுறையை ரத்து செய்ய நாளை அலுவலகத்திற்கு முன்னதாக போராட்டம் செய்ய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், கடந்த 2012ம் ஆண்டு இதே தகவல் பரிமாற்றம் மையத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அடிக்கடி கழிவறை சென்று வந்ததால் அவரை தண்டித்த குற்றத்திற்காக நிர்வாகம் மீது நீதிமன்றம் 750 யூரோ அபாரதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை