தமிழக வேட்பாளர்களின் பண நடமாட்டம்; கண்காணிக்க நடவடிக்கை!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
தமிழக வேட்பாளர்களின் பண நடமாட்டம்; கண்காணிக்க நடவடிக்கை!

புதுடில்லி, மார்ச்.5-

வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக தனி வங்கி கணக்கை தொடங்கி அந்த வங்கி கணக்கு மூலம் மட்டுமே தேர்தல் செலவுகளை செய்யவேண்டும்.பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழுக்கள், வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு, மாநில கலால் துறை, போலீஸ் ஆகிய துறைகள் தேர்தல் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் மது மற்றும் பிற போதை பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் இருப்பு ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது. பறக்கும் படையின் நடமாட்டம் ஜி.பி.எஸ்.கருவி வழியாக கண்காணிக்கப்படும்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு விமான நிலையங்களில் பண நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு புலனாய்வு அறிக்கைகளையும் தயார் செய்து தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.பொதுமக்களுக்கு இடையூறு நேராத வகையில் பணப்புழக்கம் குறித்து கண்காணிக்கப்படும்.கைப்பற்றப்பட்ட பணம் குறித்து முறையான விசாரணை நடத்தும் வகையில் மாவட்ட அளவில் அமைப்புகள் ஏற்படுத்தப்படும். இது குறித்த பொதுமக்களின் புகார்களை விசாரிக்கும் வகையில் மேல்முறையீட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.வேட்பாளர்கள் ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடை அல்லது கடன் தொகையை ரொக்கமாக பெறுவது தடை செய்யப்படுகிறது. ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை காசோலை, வரைவோலை அல்லது வங்கி வழியாக மட்டுமே பெறவேண்டும்.தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பெரும் தொகைகள் குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு விவரம் தெரிவிக்க வேண்டும்.தேர்தல் புகார்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் துணையுடன் பொதுமக்களும் வாக்காளர்களும் அளிக்கும் வகையில் ஆண்டிராய்டு செயலி அறிமுகப்படுத்தப்படும். இந்த செயலி வழியாக புகார் அளிப்பவர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக பதில் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை