தமிழகத் தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்! மார்ச் 5-இல் தேர்தல் தேதி அறிவிப்பு!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
தமிழகத் தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்! மார்ச் 5இல் தேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னை, மார்ச். 3–

தமிழக சட்டசபை பதவிக்காலம் மே மாதம் 22ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அண்மையில் டில்லியில் நடந்த தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரிகள் கூட்டத்தில் தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை முடிவு செய்யப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக ஒப்புதல் வழங்கியது.எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் சட்டசபைத் தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் 5 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்று பேசினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து வாக்குப்பதிவு  இயந்திரங்களும் வந்து விட்டது. தமிழகத்தில் ஏற்கனவே 65 ஆயிரத்து 616 வாக்குச் சாவடிகள் உள்ளன. புதிதாக கூடுதல் வாக்காளர்கள் சேர்ந்துள்ளதால் கூடுதலாக 870 வாக்குச்சாவடிகளை அமைக்க தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் ஓரிரு நாளில் அறிவிக்கும்.தேர்தலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடியை தேர்ந்தெடுத்து அதில் அதிகாரி முதல் ஊழியர் வரை அனைவரையும் பெண்களாக நியமிக்கவுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.கட்சி ஏஜெண்டுகளும் பெண்களாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் பேசவுள்ளோம். வாக்குச் சாவடிகளைப் பாதுகாப்பு பணிகளுக்கும் பெண் போலீசார் நிறுத்தப்படுவார்கள்.வாக்குச் சாவடி நிலவரம் பற்றி அறிந்துக்கொள்ள 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் வாக்குச் சாவடி விவரங்கள் செல்போனில் விரிவாக வரும். அதை வைத்து வாக்குச் சாவடியில் கூட்டம் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.ஒவ்வொரு மாவட்டத்தில் 3 அதிகாரிகள் கொண்ட பறக்கு படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனையில் ஈடுபடுவார்கள். போலி வாக்காளர்கள் 6 லட்சம் பேர்களைப் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறோம். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

மூலக்கதை