14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் சொத்து குவிப்பா? நாடாளுமன்றத்தில் அதிமுக அமளி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் சொத்து குவிப்பா? நாடாளுமன்றத்தில் அதிமுக அமளி

புதுடில்லி, மார்ச் 2- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 14 நாடுகளில் சொத்துக்கள் குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று நாடாளுமன்றத்தில் அதிமுக தரப்பினர் அமளியில் ஈடுப்பட்டனர். 

'ஏர்செல்-மெக்சிஸ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கை தற்போது வருமான வரித் துறையும் அமலாக்க பிரிவும் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கார்த்தி சிதம்பரம் மலேசியா, சுவிட்சர்லாந்து உட்பட 14 நாடுகளில் சொத்துக்களைக் குவித்துள்ளதாக தி பயோனீர் எனும் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

அதனை ஆதாரமாக கொண்டு, அதிமுக எம்.பிகள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பினர். இதனால் மக்களவை நாள் முழுதும் தள்ளி வைக்கப்பட்டது. 

குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டவை; 

*மலேசியாவில் 3.10 கோடி ரூபாய் மதிப்பில் (1.8 மில்லியன் ரிங்கிட்) அடுக்குமாடி குடியிருப்பு வாங்கப்பட்டுள்ளது.

*சிங்கப்பூரில் உள்ள கார்த்தியின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டன்சி' நிறுவனம் பிரிட்டனில் 'சோமர்செட்'என்னுமிடத்தில் 9.48 கோடி ரூபாய்க்கு 88 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது.

* தென் ஆப்ரிக்காவில் திராட்சை தோட்டம் உட்பட மூன்று தோட்டங்களை அவரது நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான தொகை துபாய் வழியாக சட்ட விரோதமாக பரிமாற்றம்.

இதனைப் பற்றி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், அந்த குற்றச்சாட்டுகளை நான் ஏற்கனவே மறுத்துள்ளேன். என் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படியானவையே என்றார்.

மூலக்கதை