இந்தியாவில், விமானச் சேவைகளில் தனியாதிக்கமா? ரத்தன் டாடா- பெர்ணான்டஸ் கடும் விமர்சனம்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
இந்தியாவில், விமானச் சேவைகளில் தனியாதிக்கமா? ரத்தன் டாடா பெர்ணான்டஸ் கடும் விமர்சனம்

கோலாலம்பூர், பிப்.29-

உள்நாட்டு விமான நிறுவனங்களைப் பாதுகாக்க இந்தியா கடைபிடிக்கும் ‘5/20’ என்ற விதிமுறையை நீக்கவேண்டும் என்று பிரபல இந்தியத் தொழில் அதிபர் ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்தார்.

‘ஏர்ஆசியா இந்தியா’ நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ரத்தன் டாடா விளங்கி வருகிறார். இந்நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு இந்திய பங்குதாரர்களில் இவரும் ஒருவராவார். மற்றொரு இந்திய பங்குதாரராக டெலெஸ்ட்ரா டிரேட்பிலேஸ் உரிமையாளர் அருண் பத்தியா இருந்து வருகிறார்.

மேலும் ஏர்ஆசியா இந்தியா நிறுவனத்தில் 49 விழுக்காடு பங்குகளை மலேசியாவின் டோனி பெர்ணான்டசும் அவரது பங்காளிகளும் வைத்திருக்கின்றனர்.

இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்கள், 5 ஆண்டுகாலம் அங்கு செயல்பட்ட பின்னர், 20 விமானங்களை வைத்திருந்தால் மட்டுமே அங்கிருந்து வெளிநாடுகளுக்கான பயணச் சேவைகளைத் தொடங்க முடியும் என்று 5/20 என்ற அந்த விதிமுறை வலியுறுத்துகிறது. இந்த விதிமுறையானது, பழைய விமான நிறுவனங்கள், அனைத்துலகப் பயணிகளை அபகரிப்பதற்கு தான் உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இப்போது பலத்த சர்ச்சை நிலவிவருகிறது இதில் டோனி பெர்ணான்டசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் ரத்தன் டாடா.

இந்தியாவில் உளநாட்டு விமானச் சேவையை நடத்தி வருகின்றாவர்கள் அனைவரும் இந்தியர்கள் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல், இந்தியாவில் வாழாத ஒரு இந்தியர் (என்.ஆர்.ஐ.) என்பதையே ரத்தன் டாடா மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார் என்று தெரிகிறது. நரேஷ் நீண்ட காலமாகவே லண்டனில் வாழ்ந்து வருகிறார்.

இந்தியாவிலேயே வாழாத ஒரு இந்தியர், ஒரு விமான நிறுவனத்தில் 100விழுக்காடு பங்குகளைக் கொண்டிருக்க முடிகிறது. ஆனால், வெளிநாட்டுக்காரர்கள் 49 விழுக்காடு மட்டும் தான் வைத்துக் கொள்ள முடியும்.  மலேசியராக இருக்கின்ற டோனி பெர்ணான்டசை ஒரு என்.ஆர்.ஐ. ஆகக் கருதப்படமுடியாதா என்று ரத்தன் டாடா கேள்வி எழுப்பினார்.

டாடா நிறுவனம், கூட்டுத் திட்ட அடிப்படையில், ஏர் ஆசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய இரு உள்நாட்டு விமான நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஏர்ஆசியா இந்தியா நிறுவனத்தில் டோனி பெர்ணான்டசும் விஸ்தாராவில் சிங்கப்பூர் ஏர் லையன்ஸ்சும் பங்குதாரர்களாக உள்ளன.

ஏர்ஆசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய இவ்விரு நிறுவனங்களும் இந்தியாவின் 5/20 விதி முறைகளின் படி அனைத்துலகச் சேவைகளை நடத்த தகுதியில்லை என்ற நிலையில் உள்ளன. இந்த விதிமுறைகள் இந்திய விமான நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதாக தெரியவில்லை. போட்டிகளுக்குப் பயந்து கொண்டு தனியாதிக்கம் செலுத்தும் நிலையே காட்டுகிறது என ரத்தன் டாடா சாடினார்.

அதே வேளையில் தேசிய நலனுக்கு எதிராக ரத்தன் டாடா பேசுகிறார் என்று இந்திய விமான நிறுவனங்களின் சம்மேளனம் குறைகூறியது. ரத்தன் டாடா தமது சொந்த நலனுக்காக பேசுகிறார் என்று அது சாடியது.

“இந்தியா மக்களே, உங்களின் குரல்கள் மேலும் மேலும் கூடுதலாக ஒலிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்று தம்முடைய டிவிட்டரில் டோனி பெர்ணான்டஸ் தெரிவித்திருக்கிறார். ஏனெனில், வெகு சிலரின் கட்டுப்பட்டில் இந்திய விமானச் சேவை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, என்.ஆர்.ஐ. எனப்படும் இந்தியாவில் வாழாத இந்தியர்களின் கட்டுப் பாட்டிலேயே இருந்து வருகிறது என்று டோனி பெர்ணான்டஸ் கூறியுள்ளார்.

 

இந்தியாவுக்கு இப்போது கூடுதலான சுற்றுப்பயணிகள் தேவைப்படுகின்றது. கூடுதலான வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவேண்டும் உலகிலேயே 5/20 போன்ற விதிமுறையைக் கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியா தான் என்றார் அவர்.

மூலக்கதை