மனைவியை கொல்ல கூலிப்படையை அனுப்பிய கணவன்: சினிமா பாணியில் நிகழ்ந்த அதிரடி திருப்பம்

NEWSONEWS  NEWSONEWS
மனைவியை கொல்ல கூலிப்படையை அனுப்பிய கணவன்: சினிமா பாணியில் நிகழ்ந்த அதிரடி திருப்பம்

ஆப்பிரிக்காவில் உள்ள புரூண்டி நாட்டை சேர்ந்த Noela Rukundo என்பவரும் காங்கோ நாட்டை சேர்ந்த அவரது கணவரான Balenga Kalala ஆகிய இருவரும் அவுஸ்ரேலியாவில் அகதிகளாக குடியேறி வசித்து வந்துள்ளனர்.

மனைவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 குழந்தைகள் இருந்த நிலையில், முன்னாள் கணவனை விவாகரத்து செய்துவிட்டு Balenga Kalala-வை மறுமணம் செய்து இவர் மூலம் 3 குழந்தைகள் உள்ளது.

ஆனால், தன்னுடைய மனைவி தனக்கு விசுவாசமாக இல்லாமல் கள்ளதொடர்பு வைத்துள்ளதாக கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரி மாதம் தனது உறவினர் ஒருவரின் மரணத்தை தொடர்ந்து தாய்நாடான புரூண்டிக்கு செல்ல மனைவி திட்டமிட்டுள்ளார்.

இதனை அறிந்த கணவன் புரூண்டியின் தலைநகரான Bujumbura-வில் சில கூலிப்படைகளிடம் 3,500 பவுண்ட் விலைபேசி மனைவியை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

கணவனின் சதி திட்டத்தை அறியாத மனைவி Bujumbura நகருக்கு வந்து இறங்கியதும் அந்த கூலிப்படைகள் அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

ஒரு பாழடைந்த பங்களாவில் அவரை கட்டி வைத்தபோது மர்ம நபர்களில் ஒருவனுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.

அதாவது, கடத்தி வந்துள்ள அந்த பெண்ணின் சகோதரன் இவருடைய நண்பர் ஆவார்.

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் ‘உன்னை கொல்ல ஏன் உன் கணவர் எங்களை அனுப்பி வைத்தார்? நீங்கள் அவருக்கு என்ன துரோகம் செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ‘நீங்கள் பொய் கூறுகிறீர்கள். என்னை எனது கணவர் மிகவும் நேசிக்கிறார். அவர் என்னை கொலை செய்ய முயற்சி செய்ய மாட்டார்’ என உறுதிப்பட கூறியுள்ளார்.

அவருடைய பரிதாப நிலையைக்கண்டு உடனே அவரது கணவரை கைப்பேசியில் அழைத்து, கைப்பேசியை ‘Loud Speaker’-ல் வைத்துள்ளனர்.

‘உங்கள் மனைவியை கடத்தி விட்டோம். இவரை கொலை செய்த பிறகு என்ன செய்வது?’ என கேட்டுள்ளனர். இதற்கு மறுபக்கத்தில் உற்சாகமாக சிரித்த கணவன் ‘அவளை கொன்று துண்டு துண்டாக வெட்டி அங்கேயே புதைத்து விடுங்கள்’ என கூறியுள்ளான்.

தன்னை கொல்ல உத்தரவிடும் கணவனின் குரலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி உச்சக்கட்ட துயரத்திலும் அச்சத்திலும் மயங்கி விழுந்துள்ளார்.

ஆனால், அவரை கடத்திய நபர்கள் கணவனிடம் கைப்பேசியில் பேசிய உரையாடல்களின் பதிவு மற்றும் வங்கி வழியாக பணம் அளித்த ரசீது ஆகியவற்றை அங்கு வைத்துவிட்டு பெண்ணை கொலை செய்யாமல் திரும்பியுள்ளனர்.

இவை அனைத்தையும் அறிந்த மனைவி பின்னர் அங்குள்ள அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு அவுஸ்திரேலியா திரும்பி வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால், கார் கதவை திறந்துக்கொண்டு மனைவி உயிரோட வந்ததை கண்டு கணவன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். கணவனின் கொடூர சதி திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுத்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் கணவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கணவன் மூலம் தனக்கு ஏற்பட இருந்த மரணம் தொடர்பாக மனைவி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சி நிகழ்வுகளை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை