வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை

வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம், முட்டம், ராஜாக்கமங்கலம், புத்துறை, ஆரோக்கிய புரம் பெரியகாடு ,பிள்ளைதோப்பு  பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். 

மீன்பிடிப்பின்போது படகு பழுது, இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு படகு ஒதுங்கினால், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, பிற நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

கடந்த இரு மாதங்களில் மட்டும், துபாயிலிருந்து மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் ஈரான் கடற்பகுதியிலும், பஹ்ரைனிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் கத்தாரிலும், குவைத்தில் 11 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 

இதே போன்று, துபாயில் உடன் இருந்த அரபி மீனவர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்காக, கடந்த 2 ஆண்டுகளாக 23 மீனவர்கள் துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஈரான் சிறையில் இருக்கும் தங்களுக்கு சரியாக உணவு அளிக்கவில்லை என உறவினர்களிடம் மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அயல்நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை