என் அம்மா- தங்கர் பச்சானின் ஆவணப்படம்

தினகரன்  தினகரன்
என் அம்மா தங்கர் பச்சானின் ஆவணப்படம்

சென்னை, : தனது தாயை பற்றி இயக்குனர் தங்கர் பச்சான் ‘என் அம்மா’ என்ற தலைப்பில் ஆவணப்படம் உருவாக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:பிலிம் சுருள்களில் யார் யாரையோ படம்பிடித்துக் கொண்டிருந்த நான், என் அப்பாவை பிடித்து வைத்த படம், ஒன்றே ஒன்றுதான். அந்தப் படமும் பதிவு செய்யாமல் போயிருந்தால், பத்துப் பிள்ளைகளைப் பெற்ற அவரின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அவர் எப்படி இருப்பார் என்பதே தெரியாமல் போயிருக்கும். அதனாலேயே நேரம் கிடைக்கும் போதெல்லாம், அம்மாவின் நடவடிக்கைகளையும், பேச்சுக்களையும் பதிவு செய்து வைத்திருந்தேன்.
14 வயதில் தாலி கட்டி, பத்து பிள்ளைகளைப் பெற்று  வளர்த்தவர். இறுதிவரை மருந்து மாத்திரை சாப்பிடாமல், 91 வயதுவரை தனி அடையாளத்துடன் வாழ்ந்து மறைந்தவர் என் அம்மா. ஒவ்வொருவருக்கும் நினைவில் அதிகப் படியாக நிற்பது அம்மாவின் நினைவுகள். அதற்காகவே ‘என் அம்மா’ என்ற இந்த ஆவணப் படத்தை எடுத்தேன். இதைப் பார்த்தவர்கள், ‘ஐயோ, நான் என் அம்மாவை இதுபோல் எடுத்து வைக்கவில்லையே’ என்று புலம்பு கிறார்கள். அவர்கள் உருவாக்கி வைத்த சொத்துக்களை பிள்ளைகளுக்குத் தந்துவிட்டுப் போகும் நாம், அவர்களின் வரலாற்றை எதிர்கால தலைமுறைகளுக்கு கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டாமா?. அதனால் 10 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படத்தை எடுத்தேன். இது என் அம்மா பற்றிய ஆவணப்படம் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குமான மனசாட்சியோடு பேசும் இது. இதை https://www.youtube.com/watch?v=1gK6-i3A35U  இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.
இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.

மூலக்கதை