சிங்கள பெரும்பான்மையினர் குறித்து தமிழ் மக்களுக்கு அச்சமுண்டு: ஜயம்பதி விக்ரமரட்ண

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
சிங்கள பெரும்பான்மையினர் குறித்து தமிழ் மக்களுக்கு அச்சமுண்டு: ஜயம்பதி விக்ரமரட்ண

Thursday, 28 January 2016 04:07

தற்போது கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கூட சிங்கள பெரும்பான்மையினர் ஒன்றிணைந்து பறிந்துவிடுவார்களோ?, என்கிற அச்சம் தமிழ் மக்களிடம் உண்டு என்று அரசியலமைப்பு சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். 

‘ஒற்றையாட்சி’ ‘சமஷ்டி’ என்ற லேபல்கள் அவசியமில்லை. அதிகாரப் பகிர்வு என்பது நாட்டைப் பிரித்துவிடும் என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதனாலேயே பெரும்பான்மையானவர்கள் ‘ஒற்றையாட்சி’ என்ற பதத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தி ஹிந்து பத்திகைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “பிரிவினைவாதப் போக்கிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதேநேரம், இந்நாட்டில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றிணைந்து, கொடுக்கப்பட்டுள்ளவற்றை (தற்பொழுது) மீளஎடுத்துக்கொள்வதையும் பாதுகாக்க வேண்டும். இதன் அடிப்படையில் அதிகாரங்களைப் பகிர்வதாயின் மூன்று வழிகளில் இவ்வாறான விடங்களைத் தடுக்க முடியும்.

முதலாவது சகல மாகாண சபைகளின் இணக்கத்தையும் பெற்றுக்கொள்வது, இரண்டாவது, சகல மாகாணங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது, மூன்றாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதாகவும் அமையும்.

அதிகாரப் பகிர்வு என்பது மாகாணசபைகளுக்கு மாத்திரமன்றி அதன் கீழும் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதே இடதுசாரியைச் சேர்ந்த எமது நிலைப்பாடு. உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

1978ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் கலந்துரையாடி வருவதால் இம்முயற்சியை மேலும் இழுத்தடிக்காமல் ஆறு மாதங்களில் பூர்த்திசெய்ய வேண்டும். இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதால் அரசியலமைப்பு மாற்றத்துக்கு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

13வது அரசியலமைப்பின் கீழ் தேசிய கொள்கை அமைப்பது என்ற போர்வையில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன. இவ்வாறான நிலையில் சகல மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதிகாரங்களைப் பகிர்வதன் அடிப்படையில் தேசிய கொள்கைகளை அமைப்பதில் எதுவித தவறும் இல்லை.

அதிகாரப் பகிர்வு என்பது பிரச்சினைக்குத் தீர்வு மாத்திரமன்றி, அபிவிருத்தியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கக்கூடிய கருவியாகவும் உள்ளது. சகல இன மக்களையும் உள்வாங்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றம் அமைய வேண்டும்.” என்றுள்ளார்.

மூலக்கதை