மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாடுகளின் தலையீட்டை நிராகரிக்க முடியாது: ரணில் விக்ரமசிங்க

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாடுகளின் தலையீட்டை நிராகரிக்க முடியாது: ரணில் விக்ரமசிங்க

Thursday, 28 January 2016 03:47

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாடுகளின் தலையீட்டினை நிராகரிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அதில், வெளிநாடுகளின் தலையீட்டை நிராகரிக்க முடியாது என்கிற பதிலை பிரதமர் வழங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாவது, “ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் எமது அரசாங்கம் உறுதி பூண்டிருக்கின்றது. பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை எதிர்வரும் மே மாதம் உருவாக்கப்படும். போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சந்தேகங்கள் உள்ளன. சரியான எண்ணிக்கையைக் கண்டறிவதில் நாம் ஆர்வம் கொண்டிருக்கிறோம். போரின்போதும் போருக்குப் பின்னரும் பலர் காணாமற்போயுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் இறந்து போயிருக்கலாம். அவர்கள் எவ்வாறு இறந்தனர்? என்ன நடந்தது? என்று அறிந்து கொள்ளும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்." என்றுள்ளார்.

மூலக்கதை