மவுன்ட் அட்டை விலை உயர்வால் தினசரி காலண்டர் விற்பனை 40% வரை சரிவு: சிவகாசி நிறுவனங்கள் அதிருப்தி

தினகரன்  தினகரன்
மவுன்ட் அட்டை விலை உயர்வால் தினசரி காலண்டர் விற்பனை 40% வரை சரிவு: சிவகாசி நிறுவனங்கள் அதிருப்தி

மவுன்ட் அட்டை விலை உயர்வால் மாற்றம் செய்த நேரம்:1/27/2016 1:58:40 AM

01:03:08Wednesday2016-01-27

மதுரை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 2016ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. ஆண்டுதோறும் ஆடி 18  அன்று (ஆகஸ்ட் முதல் வாரம்) அடுத்த ஆங்கில ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு, ஆர்டர் பெறப்படும். சிவகாசியில் 10 பெரிய காலண்டர்  தயாரிப்பு நிறுவனங்களும்,  100க்கும் அதிகமான சிறிய காலண்டர் உற்பத்தியாளர்களும் உள்ளனர். வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்  ஆர்டர்களை பெற்று நவம்பர், டிசம்பர் மாதங்களில் காலண்டர் உற்பத்தி பணி துவங்கப்படும். 2016ம் ஆண்டு தினசரி காலண்டர் ஒன்றுக்கு ரூ.20 முதல்   ரூ.300 விலை வரை ஆர்டர் புக்கிங் செய்தனர். ஆந்திரா, வேலூர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மில்களில் இருந்து காலண்டர் அட்டை  தயாரிப்பதற்கு தேவையான மவுன்ட் அட்டைகள் வாங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில் தொடர்மழை காரணமாக இப்பகுதிகளில் மவுன்ட் அட்டை தயாரிக்கும் பணி பாதிப்படைந்தது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டதால்,  அட்டை விலையை உற்பத்தியாளர்கள் திடீரென உயர்த்தி விட்டனர். இதில் ஒரு டன் மவுன்ட் அட்டை ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.16 ஆயிரமாக உயர்ந்தது.  இதையடுத்து காலண்டருக்கான அட்டை தயாரிப்பு செலவு அதிகரித்தது. காலண்டர் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களுக்கு, விலையை  உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  ரூ.20க்கு ஆர்டர் பெறப்பட்ட தினசரி காலண்டர் விலை ரூ.30, ரூ.30க்கு ஆர்டர் பெறப்பட்ட காலண்டர் விலை ரூ.45 என  அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் பலர் தங்களது ஆர்டரை கேன்சல் செய்து விட்டனர்.

இதையடுத்து சிவகாசியில் இந்த ஆண்டு காலண்டர் விற்பனையில் 40 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. விற்பனை பாதிக்கப்பட்டதால், வியாபாரிகள்  பலர் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். காலண்டர் கம்பெனி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், `‘காலண்டர் தயாரிப்புக்கு தேவையான ரியல் ஆர்ட், போஸ்டர்,  மேப்லித்தோ பேப்பர், அட்டை மற்றும் மை போன்ற மூலப்பொருட்களின் விலை இந்த ஆண்டு 3 சதவீதம் வரை அதிகரித்தது.

இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு ஆர்டர்கள் குறைவாகத்தான் இருந்தன. முக்கிய மூலப்பொருளான மவுன்ட் அட்டை விலை, மழையால் திடீரென  இருமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் காலண்டர் விற்பனையில் பெருமளவு சரிவு ஏற்பட்டதால், சிறு காலண்டர் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை  சந்தித்துள்ளனர்’’ என்றார்.

மூலக்கதை