உத்தப்புரம் கலவர வழக்கு: பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க உத்தரவு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உத்தபுரத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தீண்டாமை சுவரை 2008-ம் ஆண்டு இடித்த போது, கலவரம் வெடித்தது. அப்போது, அப்பாவி பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. 

இதில், குற்றம்சாற்றப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றக் கிளையில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொன்னுதாய் வழக்கு தொடர்ந்தார். 

இதில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 60,000 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த நிவாரண உதவியை அதிகாரிகள் வழங்கவில்லை.

இதனையடுத்து, பொன்னுத்தாய் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்ரமணியம் மற்றும் கிருபாகரன் அடங்கிய அமர்வு, உத்தபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு தலா ரூ. 60,000 இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

ஏற்கனவே இடைக்கால நிவாரணமாக வழங்கிய தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், இழப்பீட்டு தொகையை இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூலக்கதை