தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

கதிரவன்  கதிரவன்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு’ 4-ம் கட்ட பயணத்தில், நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாநகர் பகுதி குடியிருப்போர் பொதுநல சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்கள், மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும், முதியோர் உதவித்தொகை சரிவர கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும், அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதையடுத்து பொதுநல சங்க நிர்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் குறைகள், கோரிக்கைகளை நிறைவேற்றிடவேண்டும் என்று இந்த பயணத்தை மேற்கொண்டுவருகிறேன். வருகிற 12-ந் தேதிக்குள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ‘நமக்கு நாமே விடியல் மீட்பு’ பயணத்தை நடத்தியிருக்கிறேன் என்ற பெருமையை அடைய இருக்கிறேன்.

இந்த பயணம் தேர்தலில் ஆதரவு கேட்பதற்காக மட்டும் அல்ல. நாங்கள் பொறுப்புக்கு வந்த பின்னரும் உங்களை வந்து சந்திப்போம், உங்கள் குறைகளை கேட்போம். அதனை நிறைவேற்றி தருவோம் என்ற உறுதியை ஏற்பதற்காகத்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் உங்கள் குறைகளை, கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய காத்திருக்கிறோம்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் குடிநீரை கூட காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழல் இருக்கிறது. உலக அளவில் எந்த அரசாங்கமாவது தண்ணீரை விற்கிறதா? என்றால் இல்லை. ஆட்சிக்கு வந்தால் 20 லிட்டர் தண்ணீர் இலவசமாக தருவோம் என்று சொன்னார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை.

அம்மா குடிநீருக்கு மட்டும் தண்ணீர் அரசுக்கு கிடைக்கிறது. சட்டசபையில் 110 விதியை மரபு மீறி ஜெயலலிதா பயன்படுத்துகிறார். 110 விதியின் கீழ் ஜெயலலிதா சுமார் 120 முதல் 125 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் 5 சதவீதத்தை கூட அவர் நிறைவேற்றவில்லை.

தி.மு.க. ஆட்சியில் மத்திய-மாநில அரசு துறைகளை முறையாக ஒருங்கிணைத்து வைத்திருந்தோம். ஆனால் தற்போதைய ஆட்சியில் அரசு துறைகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. இதுவே சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு முதன்மையான காரணம். தமிழக அரசு சமீபத்தில் தொடங்கிய அழைப்பு மையத்தினை அவசரத்திற்கு தொடர்புகொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளை தீர்க்க ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். அந்த மாற்றம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர்தான் நிகழும். மக்கள் விரும்பும் ஆட்சியைத்தான் தி.மு.க. தர விரும்புகிறது. கருணாநிதி தலைமையில் விரைவில் நல்லாட்சியை தருவோம் என்ற நம்பிக்கை எங்களை விடவும், மக்களிடம் அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

2016-01-27

மூலக்கதை