சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்; அதற்கு சிங்கள மக்களும் ஒத்துழைக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்; அதற்கு சிங்கள மக்களும் ஒத்துழைக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Wednesday, 27 January 2016 04:14

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

‘சிங்களத் தேசிய தலைவர்களால் முன்மொழியப்பட்ட சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துமாறு உங்கள் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து எங்களுக்கு ஆதரவளியுங்கள்’ என்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, "நாட்டின் நிர்வாகத்தில் அனைத்து இன மக்களும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு சமஷ்டி முறைமை ஆட்சி என்றால் நாடு ஒன்றுபடும் அதேவேளை, ஒற்றை ஆட்சி முறைமை என்றால் நாடு பிளவுபடும். ஓரினத்தை மற்றோர் இனம் அடிமைப்படுத்த முனையும்போதுதான் குரோதமும், பிரிவினைவாதமும் ஏற்படும். இதனை சிங்கள் மக்கள் தமது தலைவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.

சமஷ்டி முறை அதிகாரப்பரவலாக்கம் தமிழ் மக்களால் உச்சரிக்கப்பட்ட ஒரு புதிய சொல் அல்ல. 1926ஆம் ஆண்டில் சிங்கள மக்களால் தேசியத் தலைவராக இன்னும் மதிக்கப்படும் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவால்தான் முன்மொழியப்பட்டது. தன்னுடைய முன்மொழிவை நியாயப்படுத்தி 'Morning Leader' என்ற பத்திரிகையில் ஆக்கபூர்வமான ஐந்து கட்டுரைகளை எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, சுவிஸ் நாட்டில் இருப்பதுபோன்று ஒரு சமஷ்டி முறையே இலங்கைக்கும் பொருத்தமானது என்றும் அடித்துக் கூறியுள்ளார்.

1931ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த கண்டிய சிங்களத் தலைவர்களும் சமஷ்டி முறையே ஏற்றது என சாட்சியமளித்துப் பதிலளித்துப் பதிவுசெய்துள்ளனர். எனவே, நாட்டின் நலனில் அக்கறையுடன் செயற்பட்ட தேசிய தலைவர்களும் சிங்கள மக்களும் சமஷ்டி ஆட்சி முறைமையை எதிர்க்கவில்லை. சில சுயநலவாத அரசியல் பினாமிகளே நாடு பிளவுபட்டுவிடும் என்ற பிரேமையை ஏற்படுத்தி இனவாதத்தைத் தூண்டுகின்றனர்.

நாட்டின் நலனில் அக்கறைகொண்ட போதி மாதவனின் தர்ம போதனைகளைப் பின்பற்றும் சிங்கள மக்கள், தமது தலைவர்களும் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவேண்டுமென அழுத்தம் கொடுக்கவேண்டும் என சிங்கள சகோதரர்களிடம் கோரிக்கை ஒன்றை அன்பாக முன்வைக்கின்றேன்.

எம் மக்கள் எம்முடனேயே இருக்கின்றனர். கடந்த தேர்தலின்போது மக்கள் எமக்கு ஆணையிட்டுள்ளனர். ஏனைய இன மக்களைப்போன்று எம் இனத்தவர்களும் சம பங்குடன் நிர்வாகத்தில் நேரடி பங்குகொள்ளும் சமஷ்டி ஆட்சி முறை, அடுத்து வடக்கு, கிழக்கு இணைப்பு. இதன் மூலம் நாம் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உச்சமட்ட அதிகாரத்துடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறையைத்தான் கேட்கிறோம். இதனை நாம் எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளோம். அதற்கு மக்கள் சர்வஜன வாக்களிப்பு போன்று ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளனர். இதனையே நாம் புதிய அரசமைப்பிலும பிரேரணையாக முன்வைக்கவுள்ளோம்.” என்றுள்ளார்.

மூலக்கதை