அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு எதிர்ப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு எதிர்ப்பு

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது குடியரசுத் தினத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. 

அருணாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில் முதலமைச்சர் நபம் துகியின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தனி அணியாக செயல்பட தொடங்கினர். பின்னர் அவர்கள் பா.ஜ.க மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் நபம் துகியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர். 

இதனால் அருணாசலபிரதேசத்தில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரை செய்வது என மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை. தனக்கு உடன்பாடு இல்லாததால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து இது குறித்து விளக்கம் கேட்ட பிரணாப் முகர்ஜி, அமைச்சரின் விளக்கத்திற்கு பின்னர் நேற்று மத்திய அரசின் பரிந்துரையில் கையெழுத்திட்டார். 

இதையடுத்து குடியரசு தினமான நேற்று அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இது குடியரசு தினத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

மூலக்கதை