பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை: இயக்குநர் ராஜமௌலி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (22:26 IST)

மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (22:26 IST)

பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை: 

இயக்குநர் ராஜமௌலி

 

பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்கள் பட்டியலை நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். 

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானது குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி தனது பேஸ்புக் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ’’எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருவித உணர்வுகளோடு இருக்கிறேன். உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. இந்த கவுரவத்தை பெறும் அளவுக்கு நான் கலைப் படைப்புகளை தந்துவிடவில்லை. இது என்னுடைய தன்னடக்கமும் கிடையாது. 

அதேநேரத்தில் ராமோஜி ராவ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் பத்மவிபூஷன் விருதுக்கு தகுதியானவர்கள். அவர்களது பணி இனிவரும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கம் தரும். அவர்களைப் போன்ற மகத்தானவர்களுடன் இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்த ஆண்டே ஆந்திர அரசு என் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைப்பதாக இருந்தது. நான் சில காரணங்களுக்காக அவர்களிடம் இப்போதைக்கு வேண்டாம் என்று தொடர்ந்து வற்புறுத்தியதால் நீக்கிவிட்டார்கள். ஆனால், இந்த ஆண்டு கர்நாடக அரசால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறேன். என்னிடம் அவர்கள் கருத்து எதையும் கேட்கவில்லை. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. நான் பிறந்தது கர்நாடகம், படித்தது ஆந்திரா, வேலை பார்த்துக்கொண்டு வசிப்பது தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா. இந்த அனைத்து மாநிலங்களுக்கும் மகனாக இருப்பதில் மகிழ்ச்சி’’ என்று கூறியிருக்கிறார்.

மூலக்கதை