தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (8:54 IST)

மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (8:54 IST)

தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு

இந்தியாவின் 67வது குடியரசு தின விழாவையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு குடியரசு தின உரை நிகழ்த்தினார். 

அப்போது அவர் கூறியதாவது:– 67வது குடியரசு தினத்தையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்திய குடிமக்களுக்கும், நமது ராணுவப்படைகள், துணை ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

2015–ம் ஆண்டு இயற்கை நம்மை ஏமாற்றிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. மற்ற பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறான பருவநிலை நமது வேளாண் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு 7.3 சதவீத வளர்ச்சி இலக்குடன், இந்தியா பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி அடையும் நாடாக நிலைநிறுத்திக் கொள்ளும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு வெளிநாட்டு வர்த்தகத்தில் நிலைத்தன்மையையும், உள்நாட்டில் விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும் உதவும். அதிக வளர்ச்சி விகிதத்தை அடையும் நிலையில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வது அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க உதவும்.

நமது நிலைநாட்டப்பெற்ற கோட்பாடுகளில் வன்முறை சம்பவங்கள் இரக்கமற்று தாக்குவது நமது தேசியத்தின் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இதனை கவனிப்பதற்கு இதுவே சரியான தருணம். வன்முறை, சகிப்புத்தன்மையின்மை, நேர்மையற்ற எண்ணம் கொண்ட சக்திகளிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளிப்பான சூழ்நிலை இந்த பிராந்தியத்தின் பல பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் பிராந்திய அளவில் நிலையற்றதன்மை அதிகரித்துள்ளது. தீவிரவாதத்தின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான மாற்றி அமைக்கப்பட்ட போர் என்பதை தெளிவாக காட்டுகிறது. இப்போது நாட்டின் எந்த மூலையும் இந்த கொடூரமான அரக்கனிடம் இருந்து பாதுகாப்பானது என்று கூறும் நிலையில் இல்லை.

தீவிரவாதம் பைத்தியக்காரத்தனமான குறிக்கோள் கொண்ட உணர்ச்சிகளால் தூண்டப்பட்டது. அர்த்தமற்ற கடும் வெறுப்புணர்வால் ஊக்குவிக்கப்படுகிறது. அப்பாவிகள் பலரை கொல்வதன் மூலம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. புற்றுநோயான இது உறுதியான கத்தியால் அறுவைசிகிச்சை செய்து அகற்றப்பட வேண்டும். தீவிரவாதத்தில் நல்லது அல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. அனைத்துமே முழுமையாக கொடுமையானது தான்.

தேசங்களுக்கு இடையே பிரச்சனைகள் இருப்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். நமது நெருங்கிய அண்டை நாட்டுடன் இயற்கையாகவே சில பிரச்சினைகள் உள்ளது. அவைகளை தீர்ப்பதற்கான பாலம் அமைக்க நாகரிகமான வழிகள் உள்ளன.

பேச்சுவார்த்தை, கருத்து பரிமாற்றம் போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆனால் குண்டு மழைக்கு இடையே நாம் அமைதி பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடியாது. நமது அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இவ்வாறு உரை நிகழ்த்தினார்.

மூலக்கதை