மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு: சென்னை மாணவி உடலை, ஆஸ்பத்திரியிலேயே வைத்து இருக்க ஐகோர்ட்டு உத்தரவு

கதிரவன்  கதிரவன்
மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு: சென்னை மாணவி உடலை, ஆஸ்பத்திரியிலேயே வைத்து இருக்க ஐகோர்ட்டு உத்தரவு

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரி அருகேயுள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மோனிஷா உடலை தவிர, பிற 2 மாணவிகளின் உடல் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மோனிஷாவின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது தந்தை தமிழரசன் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

என் மகள் மோனிஷா எஸ்.வி.எஸ். சித்த மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பொங்கல் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த அவள், கடந்த 22-ந்தேதி கல்லூரிக்கு சென்றார். அப்போது கள்ளக்குறிச்சியில் வைத்து என்னுடன் கடைசியாக செல்போனில் பேசினார். அதன்பின்னர், எந்த தொடர்பும் இல்லை. என் மகள் படித்த கல்லூரியில் மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் இல்லை. பொது சிகிச்சை பிரிவு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இதன்பின்னர் ஜனவரி முதல் வாரத்தில் ஒரு வீட்டில் மாணவிகளை தங்க வைத்தனர். அதுவும் 33 மாணவிகளை ஒரே வீட்டில் தங்க வைத்துள்ளனர். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. 33 மாணவிகளுக்கும் ஒரே ஒரு கழிவறை மற்றும் குளியல் அறை இருந்தது.

இதற்கிடையில், மாணவிகளிடம் ரூ.2 லட்சத்தை கல்லூரி முதல்வர் வாசுகி, அவரது கணவர் சுப்பிரமணியன், அவர்களது மகன் ஆகியோர் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், என் மகள் உள்பட 3 மாணவிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளனர். 3 பேருமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, என் மகள் உடலை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் மீண்டும் பரிசோதனை செய்யவும், என் மகள் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிடவேண்டும். எங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும் வழங்கவும் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு அவசர வழக்காக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நேற்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, ‘கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மாணவிகள் போராட்டம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3 மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அவர்களது சாவில் சந்தேகம் உள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்களது பிணம் மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு வெளியில் அவர்களது பைகள், செருப்புகள் ஒன்றுபோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 3 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, இதுகுறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும். மோனிஷாவின் உடலை சென்னை ஆஸ்பத்திரியில் வைத்து மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தவேண்டும். அதை வீடியோ படம் பிடிக்கவும் உத்தரவிடவேண்டும்’ என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் வாதிட்டார். ‘கிணற்றில் பிணமாக கிடந்த 3 மாணவிகளின் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மனுதாரர் மட்டும் தன்னுடைய மகள் மோனிஷாவின் உடலை வாங்க மறுத்துவிட்டதால், விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. அதை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.

மேலும் கல்லூரி முதல்வர் வாசுகி, தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். அவரது கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று அவர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, ‘மாணவிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது எடுத்த வீடியோவுடன், இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை அரசு தரப்பில் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதுவரை விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள மோனிஷாவின் உடலை பதப்படுத்தி வைக்கவேண்டும். பிரேத பரிசோதனையை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே நான் விசாரிக்க முடியும். ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணை மற்றும் இழப்பீடுகளை கேட்டும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். எனவே, அரசுக்கு உத்தரவிட கோரும் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

2016-01-26

மூலக்கதை