இதய நோய்க்கு பயன்படும் ஸ்டென்ட் உட்பட மருத்துவ கருவிகள் விலையை கட்டுப்படுத்த தீவிரம்

தினகரன்  தினகரன்
இதய நோய்க்கு பயன்படும் ஸ்டென்ட் உட்பட மருத்துவ கருவிகள் விலையை கட்டுப்படுத்த தீவிரம்

00:56:58Wednesday2016-01-20

புதுடெல்லி: இதய நோய்க்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உட்பட, மருத்துவ கருவிகளின் விலையை கட்டுப்படுத்துவது பற்றி நிறுவனங்களுடன் கருத்து கேட்ட பிறகு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மருந்து துறை தெரிவித்துள்ளது. மருத்துவ கருவிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து, மருந்து துறை, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், சுகாதார அமைச்சகம் மற்றும் மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவன அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், முக்கிய மருத்துவ உபகரணங்களின் விலை நிர்ணய விவரங்கள் கேட்கப்பட்டன.

இருப்பினும், இதய சிகிச்சைக்கு பயன்படும் ஸ்டென்ட் உட்பட உயிர்காக்கும் பல மருத்துவ கருவிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.  இதய சிகிச்சைக்கு தேவையான ஸ்டென்ட் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது. இது நியாயமற்றது. எனவே நிறுவனங்கள் மருத்துவ கருவிகளின் விலையை மறுஆய்வு செய்ய வேண்டும். நியாயமான விலையில்தான் மருத்துவ உபகரணங்களை விற்க வேண்டும் என மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால், அதிக பட்ச விலையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அதிகபட்ச விலை நிர்ணயம் மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பாதகமாக இல்லாமலும், அதேநேரத்தில் நோயாளிகள் நியாயமான விலை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:  மருந்து விலை நிர்ணயம் போல மருத்துவ கருவிகள் விலையையும் நிர்ணயிக்க முடியாது. ஏனெனில், ஒரு நிறுவனம் பல கட்ட ஆய்வுக்கு பிறகு கருவியை கண்டுபிடிக்கிறது. இதற்கான விலை நிர்ணயிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுபோன்ற கருவிகளை மேலும் கண்டறிய ஊக்கம் அளிக்கும் வகையில் லாபம் பெற வேண்டும்.

அப்போதுதான் புது கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுக்கும். அதேசமயம் இந்த விலை நிர்ணயம் நியாயமான வரையறைகளுக்கு உட்பட்டு இருப்பது அவசியம். இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் சார்பில் மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்கள் அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும். மருந்து விலை கட்டுப்பாட்டை தொடர்ந்து மருத்துவ கருவிகளும் நியாய விலையில் கிடைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

மூலக்கதை