மருந்து விற்பனை லாபம் : மத்திய அரசு கிடுக்கிப்பிடி

தினகரன்  தினகரன்
மருந்து விற்பனை லாபம் : மத்திய அரசு கிடுக்கிப்பிடி

01:32:22Tuesday2016-01-19

புதுடெல்லி: மருந்து விற்பனையில் லாப சதவீதத்தை அதிகபட்சமாக 35 சதவீதம் என நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் 680 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் சுமார் 530 மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதுதவிர, மருந்து விற்பனையாளர்களுக்கு சில நிறுவனங்கள் லாபமாக அதிக சதவீதத்தை அளிக்கின்றன. இதை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மருந்து துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயித்தாலும், மொத்த விற்பனையாளர்கள் விலைக்கும் மற்றும் மருந்து கடைக்காரர்களிடம் உள்ள விலைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

சில மருந்துகள் 2,000 முதல் 3,000 சதவீத லாபத்துக்கு கூட விற்கப்படுவதாக தெரிகிறது. இந்த வேறுபாட்டை களையவும், விற்பனை விலையை ஒழுங்கு படுத்தவும் அதிகபட்ச லாப சதவீதத்தை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. மருந்து துறையின் கீழ், மருந்து விலை கட்டுப்பாடு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவும், அதிகபட்ச லாப சதவீதத்தை 35 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இதன்படி விரைவில் முடிவு அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான விதிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  சில மருந்துக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மருந்து விலையில் தள்ளுபடி செய்யப்படுகிறது.  லாப சதவீதம் குறையும் பட்சத்தில் இந்த சலுகையை தொடர்வது இயலாததாகிவிடும் என மருந்துக்கடைக்காரர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை