உயிர் கொடுத்த தெய்வங்கள்! ரஜினி மன்ற விழா சிறப்பு!

நக்கீரன்  நக்கீரன்
உயிர் கொடுத்த தெய்வங்கள்! ரஜினி மன்ற விழா சிறப்பு!

உயிர் கொடுத்த தெய்வங்கள்! ரஜினி மன்ற விழா சிறப்பு!

ஜினி ரசிகர்களின் சார்பில் 'மலரட்டும் மனித நேயம்' என்கிற  பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா   வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இந்த விழாவில் குத்து விளக்கு ஏற்றி ரஜினி மன்றத்தின் கொடியேற்றப் பட்டது. விழா மேடையில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் திருவுருவப் படத்தை ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரும் 'கபாலி' பட தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ். தாணு ஆகியோரால் திறந்து வைக்கப் பட்டது.


இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் " இது சாதாரண விழா அல்ல. இது ஒரு முப்பெரும் விழா. என் நண்பன் ரஜினி நடிக்க வந்து 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா, அவரது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா. இப்படி ஒரு முப்பெரும் விழாவாக இது  நடக்கிறது..

ஏழைகளுக்கு நற்பணிகள் செய்ய இவ்வளவு பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்துள்ள சோளிங்கர் ரவியையும் அவரது தம்பி முருகனையும் பாராட்டுகிறேன். ரஜினியும் நானும் 45 ஆண்டு கால நண்பர்கள். சினிமாவில் நடிக்கும் முன்பே ரஜினி எனக்கு நண்பன். வாடா போடா நண்பர்கள் நாங்கள். இவ்வளவு உயர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனாலும் இன்றும் ரஜினியை 'டா' போட்டு கூப்பிடும் நண்பன் நான்தான். அப்படி அழைக்கும் உரிமை உள்ளவன் நான்.


சினிமாவில் 40 ஆண்டுகளாக நடிப்பதே சாதனை .அதுவும் ஒரு கதாநாயகனாக நிலைப்பது பெரிய சாதனை. 67 வயதிலும் ஒரு கதாநாயகனாக நிலைப்பது மிகப்பெரிய சாதனை. இதற்கெல்லாம் யார் காரணம்? ரஜினி சாதனை மேல் சாதனை படைக்க யார் காரணம்? அன்பு ரசிகர்களாகிய நீங்கள்தான் இதற்கெல்லாம் காரணம். ஒரு முறை ரஜினி உடல் நலம் குன்றி ராமச்சந்திரா மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். ரஜினியைப் பார்க்க டாக்டர்கள் யாரையும் அனுமதிக்க வில்லை. நான்  அங்கே போனேன் .ரஜினியைப் பார்க்காமல் போகமாட்டேன் என்று சொன்னேன். ஆனால் டாக்டர்கள்  என்னைப் பார்க்க அனுமதிக்க வில்லை . லதா ரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் அரைமணி நேரம் என்னை அனுமதிக்குமாறு போராடினார்கன். ஒரு நிமிடமாவது  அவரைப் பார்க்க விடுங்கள் என்றார்கள். இவ்வளவு தூரம் இப்படிக் கேட்கிறீர்களே இவர் யார் என்று டாக்டர்கள் வியப்போடு கேட்டார்கள். அதுதான் நண்பன்.

போய்ப் பார்த்த போது, என் நண்பன் ரஜினி ஒரு குழந்தையைப் போல படுத்துக்கிடந்தான். எனக்கு அழுகையே வந்து விட்டது. மானைப் போலத் துள்ளிக் குதித்து வருபவன். அவனால் ஒரு நிமிடம் கூட ஓய்வாக உட்கார முடியாது. அப்படிப்பட்ட என் நண்பன் குழந்தையைப் போல படுத்துக்கிடந்தான். விரைவில் குனமாகிவிடுவான் என்றார்கள். மீண்டும் சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்குப் போகிறான் என்றதும் நான் பதறிப் போனேன். ரஜினியை 'டா' போட்டு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ரஜினியை அவர் வந்தார் ,போனார் என்று சொல்ல எனக்கு  வாயே வராது. அவன் இவன் என்று சொல்லித்தான்  பழக்கம்.

ஒரு நிகழ்ச்சியில் நான் 'வாடா போடா' என்று பேசியதும் எங்கள் தலைவரையே 'வாடா போடா' என்றுபேசுகிறாயா என்று ரசிகர்கள் 'பிடிடா அவனை' என்று என்னை அடிக்க வந்தார்கள். ரஜினி அவர்களைத் தடுத்து உங்கள் நண்பர்களை வாங்க ஐயா, போங்க ஐயா, சார் என்றா சொல்வீர்கள்? என்று கேட்டதும் அமைதியானார்கள். நட்புக்கு இலக்கணம் ரஜினி. 'படையப்பா' படத்தில் நடித்த போது எனக்கும் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதிலும் 'வாடா'. என்று பேசும் வசனம் வந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்  தயக்கத்துடன் 'ரஜினி சார் அவ்வளவு பெரிய நடிகர் அவரை நீங்கள் எப்படி இப்படிப்  பேசுவது ?'என்று 'வேண்டாம்' என்றார். இதை அறிந்த ரஜினி, தடுத்து உள்ளபடியே 'வாடா'. என்று பேசட்டும் என்றார்.

சிங்கப்பூர் போன ரஜினி திரும்பிவரக் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான். ரஜினியின் ஆரோக்யம், இளமை, சுறுசுறுப்பு எல்லாம் மீண்டும் வந்து நடிக்கிறார். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான். ரஜினிக்கு உயிர் கொடுத்தது நீங்கள்தான். என்னை வாழவைக்கும் தெய்வங்கள் என்று எப்போது ரஜினி பேச ஆரம்பித்தாலும் சொல்வார். அது உண்மைதான்” என்று கூறினார்

மூலக்கதை