பிப்ரவரியில் அதிக படங்கள் ரிலீஸ்

தினகரன்  தினகரன்
பிப்ரவரியில் அதிக படங்கள் ரிலீஸ்

சென்னை: இந்த ஆண்டின் தொடக்கமே தமிழ் சினிமாவுக்கு நல்லவிதமாக அமைந்துள்ளது. ஜனவரியில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’, விஷால் நடித்த ‘கதகளி’, பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. ‘அரண்மனை 2’, ‘இறுதிச்சுற்று’ படங்கள் இந்த மாத இறுதியில் ரிலீசாகின்றன. ஆனால், பிப்ரவரி மாதத்தை சினிமாவின் கொண்டாட்ட மாதமாக குறிப்பிடலாம். காரணம், பெரிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில் ரிலீசாகின்றன.

மலையாள ‘பெங்களூர் டேஸ்’, தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ ஆக ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, சமந்தா, ராய் லட்சுமி, ஸ்ரீதிவ்யா, பார்வதி நடித்துள்ளனர். தவிர, பிரசாந்த் நடித்த ‘சாஹசம்’, பல விருதுகளைக் குவித்துள்ள வெற்றிமாறனின் ‘விசாரணை’, சித்தார்த் தயாரித்து நடித்த ‘ஜில் ஜங் ஜக்’ ஆகிய படங்கள், பிப்ரவரி முதல் வாரம் ரிலீசாகின்றன.

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காதலும் கடந்து போகும்’, ‘மெல்லிசை’, ஜெயம் ரவி நடித்த ‘மிருதன்’, ஸ்ரீகாந்த் நடித்த ‘சவுகார் பேட்டை’ ஆகிய படங்கள் இரண்டாவது வாரத்தில் திரைக்கு வருகின்றன. விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படம்
மூன்றாவது வாரம் ரிலீசாகிறது.


அருள்நிதி நடித்த ‘ஆறாது சினம்’, அதர்வா நடித்த ‘கணிதன்’, பேய் படமான ‘ஜீரோ’, மா.கா.பா.ஆனந்த் நடித்த ‘நவசர திலகம்’, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஹீரோவாக நடித்த ‘நையப்புடை’ ஆகிய படங்களும் பிப்ரவரியில் ரிலீசாக இருக்கின்றன.

இவை அனைத்தும் பெரிய படங்கள். தவிர, வாரத்துக்கு 4 சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அனைத்தையும் கணக்கிட்டால், பிப்ரவரியில் 20 முதல் 30 படங்கள் வரை திரைக்கு வரலாம் என்று தெரிகிறது. கடைசி நேர மாற்றமாக, சில படங்களின் ரிலீஸ் தேதி அல்லது மாதம் மாற்றப்படலாம்.

மூலக்கதை