தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு நகல் யோசனைகள் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிப்பு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு நகல் யோசனைகள் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிப்பு!

Monday, 25 January 2016 03:38

புதிய அரசியலமைப்பு யோசனைகளைத் தயாரிப்பதற்காக தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழு தன்னுடைய முதல் நகல் அறிக்கையை பேரவையின் இணைத் தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளித்துள்ளது. 

வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தியும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த உபகுழுவில் பங்களித்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருமாத காலமாக உபகுழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கல்விமான்கள் புத்திஜீவிகளிடம் பெறப்பட்ட யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கையளிக்கப்பட்ட நகல் யோசனைகளை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரான சி.வி. விக்னேஸ்வரன் எதிர்வரும் 30ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்கு சமர்ப்பித்து மேலும் கருத்துக்களைப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள், கல்விமான்கள் ஆகியோரிடமும் நகல் யோசனை தொடர்பான மேலதிக விளங்கங்கள் பெறப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.

அவ்வாறு செய்யப்பட்ட திருத்தங்களுடன் நகல் யோசனையின் இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடமும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை