​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச முடிவு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 122 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 102 ரன்களும் விளாசினர். 

இதனையடுத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா-வும், ஷிகர்தவானும் வலுவான அடித்தளமிட்டனர். ரோஹித் 99 ரன்களும், தவான் 78 ரன்களும் அடித்தனர். ஏற்கனவே தொடரை இழந்த நிலையில், மனீஷ் பாண்டேவும் கேப்டன் தோனியும் அணிக்கு ஆறுதல் வெற்றியை தேடித் தரும் முனைப்பில் ஆடினர். 

பொறுப்புடன் ஆடிய கேப்டன் தோனி, 34 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நேர்த்தியாக ஆடிய மனீஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல், சர்வதேச அரங்கில் முதல் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்தத் தொடரில் 441 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த, ரோஹித் சர்மா-வுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 
இரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி வரும 26-ம் தேதி அடிலெய்டில் நடைபெறுகிறது.

மூலக்கதை