பாகிஸ்தானில் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள்: தமிழகத்தில் கள்ளநோட்டு வழக்குகள் வெகுவாக குறைந்தன

கதிரவன்  கதிரவன்
பாகிஸ்தானில் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள்: தமிழகத்தில் கள்ளநோட்டு வழக்குகள் வெகுவாக குறைந்தன

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கள்ளநோட்டு புழக்கம் மற்றும் வழக்குகளும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கள்ளநோட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தியாவிற்கு பாகிஸ்தான் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல்வேறு தொல்லை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தீவிரவாதிகளை ஏவிவிட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி நாசவேலைகள் அரங்கேற்றப்படுகின்றன. இன்னொரு பக்கம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் சதித்திட்டங்களையும் பாகிஸ்தான் நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் புழக்கத்திற்கு விடப்படுகிறது. மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவது போல அனுப்பி, அவர்கள் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகிறது.

தமிழகத்திற்குள்ளும் கட்டிட வேலை செய்பவர்கள் போலவும், ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் போலவும், பிளாட்பாரங்களில் கடைபோட்டு துணி விற்பவர்கள் போலவும் கள்ளநோட்டு கும்பல் ஊடுருவி வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பெரும்பாலும் புழக்கத்தில் விடுகிறார்கள். தமிழகத்தில் கள்ள நோட்டு கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது வேட்டை நடத்துகிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆதரவு உளவாளிகள் ஜாகீர் உசேன் உள்பட 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவது குறைந்துள்ளது. வழக்குகள் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக போலீசார் வெளியிட்ட புள்ளி விவரக் கணக்கில் தெரியவந்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 1400 கள்ளநோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1313 கள்ளநோட்டு வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்கள் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு வழக்குகளில் கைதானவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், என்பது குறிப்பிடத்தக்கது.

2016-01-23

மூலக்கதை