​உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ படத் தலைப்பு தமிழ் வார்த்தைதான் - உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ படத் தலைப்பு தமிழ் வார்த்தைதான்  உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘கெத்து’ படத் தலைப்பு தமிழ் வார்த்தைதான் என்றும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் கெத்து என முருகப் பெருமானை குறிப்பிட்டுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க மறுத்ததை எதிர்த்து, ரெட் ஜெயின்ட் மூவிஸ் பட தயாரிப்பு  நிறுவனத்தின் மேலாளர் சரவணமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கெத்து’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் கடந்த 14- ஆம் தேதி வெளியானது. இந்த  படத்துக்கு கேளிக்கை வரி விலக்களிக்க படத்தலைப்பான ‘கெத்து’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல என கூறி படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க முடியாது என்று தமிழக அரசு கடந்த 14- ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள அகராதியில், ‘கெத்து’ என்ற வார்த்தைக்கு ‘தந்திரம்’ என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அதேபோல, மற்றொரு க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியில், கெத்து என்ற வார்த்தைக்கு ‘தன்னுடைய உயர்வையும், பெருமையையும் காட்டிக் கொள்ளும் போக்கு’ என்று அர்த்தம் கூறியுள்ளது. 
எனவே, படத்துக்கு வரிச்சலுகை தர மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கேளிக்கை வரிச்சலுகை  வழங்க தமிழக அரசுக்கு  உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மகாதேவன், கெத்து என்ற வார்த்தை தமிழ் வார்த்தைதான். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் கெத்து மனம் படைத்த முருகா! என்று பாடியுள்ளார். அந்த வார்த்தைக்கு செருக்கு, ஆணவம் எனப் பொருள்படும் என்று தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் இந்த படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுத்ததற்கான காரணம் பற்றி  விளக்கம் அளிக்க இரண்டு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்குக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மூலக்கதை