இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

கதிரவன்  கதிரவன்
இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதையடுத்து இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கடந்த ஓராண்டாக எந்த ஒரு டெஸ்டிலும் வெற்றி பெறாத தென்ஆப்பிரிக்க அணிக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வருகிறது. இந்த தொடருக்கு முன்பாக தரவரிசையில் கம்பீரமாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் இருந்த தென்ஆப்பிக்க அணி தொடரை பறிகொடுத்ததால் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடைசி டெஸ்டிலும் உதைவாங்கினால், தரவரிசையில் 4-வது இடத்திற்கு இறங்க வேண்டி இருக்கும். மாறாக வெற்றி கண்டால் 2-வது இடத்தை பிடிக்கலாம்.

ஆறுதல் வெற்றியை நோக்கி களம் காணும் டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. கால் முட்டி காயத்தில் இருந்து விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் குணமடைந்து விட்டார். இதனால் அவர் அணிக்கு திரும்புகிறார். முதல் மூன்று டெஸ்டிலும் மோசமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஸ்டியான் வான் ஜில் (5 இன்னிங்சில் 69 ரன்) நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் கலக்கி வரும் 33 வயதான ஸ்டீபன் குக் இந்த டெஸ்டில் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்க வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து அணியினரை பொறுத்தவரை வெற்றிவேட்கையை நீட்டிக்கும் ஆவலில் இருக்கிறார்கள். முந்தைய டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 83 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து பவுலர்கள் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் தங்களது புயல்வேக தாக்குதலை தொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். காயம் காரணமாக ஸ்டீவன் பின் எஞ்சிய தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், மார்க் பூடிட் ஆகிய மூன்று பேரில் ஒருவர் சேர்க்கப்படுவார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு தொடரில் மூன்று டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 102 ஆண்டுகள் ஆகிறது. இந்த டெஸ்டிலும் வாகை சூடினால், அது இங்கிலாந்துக்கு நூற்றாண்டு கால சிறப்புக்குரிய தொடராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி நடக்கும் செஞ்சூரியனில் தென்ஆப்பிரிக்க அணி இதுவரை 20 டெஸ்டுகளில் விளையாடி 15-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி இங்கு 4 டெஸ்டில் ஆடி ஒன்றில் வெற்றியும், 3-ல் டிராவும் சந்தித்துள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி டென் கிரிக்கெட் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம்.

2016-01-22

மூலக்கதை