சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா?: சட்டசபையில் காரசார விவாதம்

கதிரவன்  கதிரவன்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா?: சட்டசபையில் காரசார விவாதம்

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் உறுப்பினர் ஜெ.அன்பழகன் (தி.மு.க.) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

ஜெ.அன்பழகன்(தி.மு.க.):- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 310 கோடி வந்திருக்கிறது. மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கியிருக்கிறது. மொத்தம் 2,310 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நிதி, செலவிடப்பட்ட நிதியில் மிச்சம் வருகிறதே? அது எங்கே போனது? பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க சொல்லாமல், முதல்-அமைச்சர் நிவாரண பொது நிதிக்கு வழங்க சொல்வது ஏன்?

(உறுப்பினர் துரைமுருகனும் அதே கேள்வியை கேட்டார்)

அமைச்சர் உதயகுமார்:- முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டாலும், பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு விடும்.

உறுப்பினர் துரைமுருகன்:- செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அமைச்சர் நீண்ட விளக்கம் கொடுத்து இருக்கிறார். எங்களை நீங்கள் சமாதானப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- பெருமழையால் வந்த வெள்ளம் என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் உங்களை எப்போதும் நம்ப மாட்டார்கள்.

துரைமுருகன்:- சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டைக்குள் நீங்கள் வாக்கு கேட்க நுழையவே முடியாது. இதை சவாலாகவே விடுக்கிறேன்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- இது சவால் அல்ல, சவடால்.

அமைச்சர் வைத்திலிங்கம்:- வெள்ளத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

ஜெ.அன்பழகன் (தி.மு.க.):- யாருக்கு புகட்ட வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். பர்கூரில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட நிலை தான் சட்டமன்ற தேர்தலிலும் உங்களுக்கு கிடைக்கும்.

அமைச்சர் வைத்திலிங்கம்:- கூட்டணிக்காக பிச்சையெடுக்கிறீர்கள். உங்களால் தனித்து நிற்க முடியுமா?

துரைமுருகன்:- உங்களிடம் இருக்கும் கட்சிகளையும் (எதிர்கட்சி வரிசையில் இருக்கும் சில கட்சிகளை விரலை காட்டி) தனித்து போட்டியிட தயாரா?

இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பாக ஜெ.அன்பழகன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர், தி.மு.க. ஆட்சியில் நடந்த நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார். அப்போது துரைமுருகன் தனக்கு பேச வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

துரைமுருகன்:- இங்கே அமைச்சர் தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவத்தை பற்றி குறிப்பிட்டார். அது உண்மையா? இல்லையா? என்பது குறித்து நாங்களும் ஜூன் மாதம் கவர்னர் உரையில் பேசுகிறோம்.

நத்தம் விஸ்வநாதன்:- ஜூன் மாதம் நீங்கள் வரப்போவதில்லை.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- நீங்கள் நினைப்பது நடக்காது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

2016-01-22

மூலக்கதை